September 26, 2009

அரங்கன் திருமுற்றம்

"மாறா.."
பொன்னாச்சியின் குரல் மிக சன்னமாகத்தான் கேட்டது.
அம்மாவின் குரல் கேட்டு நப்பின்னை, மாறன் இருவருமே ஓடி வந்தார்கள்.
"அம்மா"
"நாம் தயாராக இருக்க வேண்டும். நம் ஸ்வாமி இன்று திருவரங்கம் திரும்புகிறார். அப்பா இப்போது வந்து விடுவார்."
குரல் இனிமை. மாறன் சொன்னான்.
"அம்மா நீங்களும் அழகு.. உங்கள் குரலும் அழகு"
நப்பின்னை சொன்னாள்.
"நானும் அம்மாவைப் போலவே அழகு"
"பேசாதே.. அம்மாவின் அழகுக்காகவே அப்பா அம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டார் தெரியுமா"
அந்தக் கதை இருவருக்குமே தெரியும். இருந்தாலும் கேட்க கேட்க அலுப்பதில்லை இருவருக்கும்.
"அம்மா.. சொல்லுங்கள்.. அப்பாவுக்கு உங்கள் மேல் எப்படி பிரியம் வந்தது.."
இரு குழந்தைகளுக்குப் பின்னும் பொன்னாச்சியின் முகத்தில் வெட்கம்.
"என் கண்கள் அழகு என்று அப்பா சொல்வார்.. என் பின்னேயே வருவார் எப்போதும்.. நான் கோவிலுக்குப் போனாலும் விடுவதில்லை. மணல்வெளியில் நான் நடக்கும்போது நடைபாவாடை விரித்து எனக்குக் குடை பிடித்து அழைத்துப் போவார்.. "
பொன்னாச்சியின் கண்களுக்குள் பழைய நினைவுகளின் ஊர்வலம்.
"அப்புறம் அம்மா.." நப்பின்னை அவசரப் படுத்தினாள்.
"நம் ஸ்வாமி ஒரு நாள் இதைப் பார்த்து விட்டார்.. யார் இவர்.. ஒரு பெண்ணின் பின்னே இப்படி லஜ்ஜை இல்லாமல் செல்கிறார்.. என்று விசாரித்து இருக்கிறார். அப்பாவைப் பற்றி கேள்விப்பட்டதும் தம்மிடம் அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.. அந்தப் பெண்ணிடம் எதைக் கண்டு இப்படி மையல் கொண்டீர் என்று கேட்டாராம்.. என் கண்ணழகைப் பற்றி சொன்னதும் அதை விட அழகான கண்களைக் காட்டிக் கொடுத்தால் உம் மனசு மாறுமா என்றாராம்.. அப்பா என்மீதான பிரியத்தில் அலட்சியமாய் சொன்னாராம்.. பொன்னாச்சியின் கண்களை விட அழகு இவ்வுலகில் இல்லவே இல்லை.. அப்படி நீர் காட்டினால் நான் உமக்கு அடிமை.."
மாறன் குறுக்கிட்டான்.
"அப்பா அப்போதுதானே அரங்கனை சேவித்தார்.."
"பாருங்களம்மா.. இவர் குறுக்கே பேசுவதை"
நப்பின்னைக்குக் கோபம்.
பொன்னாச்சி அவர்கள் சண்டையை ரசித்துக் கொண்டே சொன்னாள்.
"ஸ்வாமி அப்பாவை அரங்கன் மூலஸ்தானத்திற்கு அழைத்துப் போனார்.. பட்டர் ஸ்வாமியிடம் தீபம் காட்டச் சொன்னார்.. அதோ பாரும்.. உம் துணைவியின் கண்களை விட அழகான கண்களை.."
"அப்பா பார்த்தாராம்மா"
"ம்ம். நம் ஸ்வாமி சொல்லும்போது அந்த ஞானக் காட்சி கிடைக்காமலா இருந்திருக்கும்.. நம் அப்பா அரங்கனின் தாமரைக் கண்களைப் பார்த்து விட்டார்.. இந்தப் பொன்னாச்சியின் கண்களை விட அழகாய்.. இந்தப் பொன்னாச்சிக்கே அழகைக் கொடுத்த அமுதனின் கண்களை.."
"அப்புறம்தான் நீங்கள் ஸ்வாமிக்கே உரிமையாகி விட்டீர்களாம்மா"
"நாம் எல்லோருமே ஸ்வாமிக்கே உரிமைதான் மாறா.."
நப்பின்னை சொன்னாள்.
"அம்மா.. நம் ஸ்வாமியை நான் எப்படி கண்டு கொண்டேன் தெரியுமா"
மாறன் கேலியாகச் சிரித்தான்.
"ஸ்ஸ்.. மாறா கேலி செய்யக் கூடாது தெரியுமா.. "
"இல்லையம்மா.. இவர்கள் செய்த கூத்துதான் தெரியுமே.."
"சொல்லட்டுமே.. நம் ஸ்வாமியின் பெருமைதானே"
மாறன் பாதி விளையாட்டாய் வாய் பொத்தி நின்றான்.
"நாங்கள் தெருவில் மணலால் கோவில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம் அம்மா.. அரங்கனை எழுந்தருளப் பண்ணி, ஆலவட்டம் ஸமர்ப்பித்து, தூப தீபம் காட்டி, அமுது படைத்தோம்.."
"என்ன பிரசாதம் நப்பின்னை" மாறனின் கேலிக் குரல்.
"மணலில் தானே விளையாடுகிறோம்.. கொஞ்சம் மண்ணையே எடுத்து அமுதாகப் படைத்தோம் அம்மா.."
நப்பின்னையின் குரலில் ஆழ்ந்த நம்பிக்கை.
"அப்போது நம் ஸ்வாமி உஞ்சவிருத்தி வந்து கொண்டிருந்தார்.. அரங்கனின் முன் அழைக்கும் பாவனையில் ஜீயா என்றழைத்து விட்டேன் அம்மா.. "சொல்லும்போதே நப்பின்னையின் குரல் நடுங்கியது. மாறனிடமும் அமைதி. பொன்னாச்சி உணர்ச்சியில் கண் கலங்கி விட்டாள்.
"நம் ஸ்வாமி என் எதிரில் வந்து குனிந்து மண் பிரசாதம் ஏற்றுக் கொண்டார் அம்மா.. "
மூவரும் அழுதே விட்டார்கள். எதிரில் பிள்ளைஉறங்காவில்லிதாசன் வந்து நின்றது கூடத் தெரியாமல். மாறன் கவனித்து விட்டான்.
"அப்பா வந்து விட்டார் அம்மா"
"என்ன செல்லங்களா.. அம்மாவை ஏன் கலங்க வைத்து விட்டீர்கள்.."
"நம் ஸ்வாமி பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்தோம்.. அப்பா.. அவர் உங்கள் கரம் பற்றித்தானே திருக் காவிரி ஸ்நானம் செய்து விட்டு வருவார்.." தகப்பன் பெருமை குரலில் வழிந்தோடியது இருவருக்கும்.
"ம்ஹும்.. அபச்சாரம்.." என்றான் உறங்கா வில்லிதாசன் பதட்டமாய்.
"அம்மா.. நாங்கள் சொன்னது சரிதானே.."
பொன்னாச்சி கணவனைப் பார்த்தாள். அவனிடம் இன்னும் பதட்டம் தணியவில்லை. கர்வம் அற்று இருந்தவனுக்குக் கிட்டிய பரிசு அது. எப்படி அதைப் பெருமையாய் சொல்லிக் கொள்வது. இராமானுஜர் காவிரிக்கு நீராடச் செல்லும்போது முதலியாண்டானையும், நீராடியபிறகு வில்லிதாசனையும் பற்றி நடப்பது வழக்கம். மற்றவர்கள் கேட்டபோது சொன்னார். 'என்ன இருந்தாலும் குலப் பெருமை முதலியாண்டானுக்கு உண்டு..அந்த தோஷமும் வில்லிதாசருக்கு இல்லையே..'
அப்பாவின் சங்கடம் தீர்க்க நப்பின்னை மாறனைக் கேலி செய்ய முனைந்தாள்.
"நம் மாறன் தானே பிரசாதத்தைத் துப்பியது.."
மாறனின் முகத்தில் கூச்சம் அப்பிக் கொண்டது. அரங்கனின் பிரசாதம் என்று அப்பா கொடுத்ததை வாயிலிட்டுக் கொண்ட மறு வினாடி தன்னையும் மீறி உமிழ்ந்து விட்டான். 'உவ்வே..' சிறு வயது. அப்பாவின் அடி விழுந்ததும் என்ன செய்கிறோம் என்று அறியாமல் உடையவர் திருமாளிகைக்குள் ஓடிப் போனான். பின்னாலேயே தனுர்தாசனும், பொன்னாச்சியும்.
"ஸ்வாமி.. அப்பா அடித்து விட்டார்.."
நமக்கெல்லாம் ஸ்வாமியே.. என்று அப்பாவும் அம்மாவும் சொல்லியிருப்பது பொய்யாகுமா. அவர் முன்னே செல்வதுதானே முறை என்று அந்த பிஞ்சு உள்ளம் நினைத்து விட்டது.
உடையவர் முன்னிருந்தவர்கள் பதறிப் போனார்கள். ஏற்கெனவே வில்லிதாசனுக்கு உடையவரிடம் இருக்கும் அபிமானம் பொறாமையைத் தூண்டியிருந்தது.
'என்ன வளர்த்திருக்கிறான்.. பிள்ளையை.. சீச்சீ..'
உடையவரிடம் நிதானம்.
"சொல்லப்பா.. யார் அடித்தார்கள் உன்னை"
"நான் மாறன்.."
திருவாய்மொழிக்கு அடிமையான உடையவரின் நெஞ்சுள் கசிவு. மாறன் சடகோபனுக்கு அடியா..த்ரிதண்டம் ஏந்தி எழுந்து நின்றே விட்டார்.
"யார்..அடித்தது இந்தப் பிள்ளையை"
வில்லிதாசனும் பொன்னாச்சியும் அப்படியே அவர்முன் நிலத்தில் வீழ்ந்தார்கள்.
"என்ன குற்றம் செய்தான்"
"அரங்கன் பிரசாதம்.. துப்பி விட்டார்"
வில்லிதாசன் குரலில் நடுக்கம். சொல்லவே கூசியது.
"ஏனப்பா அப்படிச் செய்தாய்.."
"நீங்களே சாப்பிட்டு பாருங்கள்.. உங்களுக்கே தெரியும்.. பாவம் அரங்கன்.. எப்படித்தான் இப்படி அமுது செய்கிறாரோ.. எங்கள் அம்மா இதை விடவும் நன்றாக அமுது படைப்பார்"
பயமறிந்திருக்கவில்லை.உடையவர் ஏற்கெனவே கிலேசப்பட்டிருந்ததுதான். அரங்கனுக்கு திருமடப்பள்ளியிலிருந்து வரும் பிரசாதங்கள் சரியாக இல்லை.. பரிசாரகர்களிடம் நிலவிய அலட்சியம்.. சுத்தமின்மை.. ப்ரபோ.. ஒரு குழந்தைக்குக் கூட உன் சந்நிதி பற்றி தெரிந்திருக்கிறது.. நிர்வாகக் குறை புரிந்திருக்கிறது.. கோவிலொழுகு செய்ய வேண்டிய கடமை புரிகிறது.. அடியேன் ஏன் வாளாவிருந்து விட்டேன்..
பிறகு இராமானுஜர் திருமடப்பள்ளி சீர்திருத்தம் செய்ய முனைந்ததும், பிடிக்காதவர்கள் அவருக்கு விஷமிட்டு பிக்ஷை அளிக்க முயன்றதும், மனம் வருந்தி திருவெள்ளரைக்கு உடையவர் சென்றதும் பழைய நிகழ்ச்சிகள். இன்று மீண்டும் உடையவர் திரும்பி வருகிறார். அதுவும் அரங்கனின் கட்டளையால். அகளங்காழ்வானையும், திருவரங்கத்து அரையர் ஸ்வாமியையும் அனுப்பி மறுபடி இரண்டு வருட காலத்திற்குப் பிறகு உடையவரை திருப்பி அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். பட்டர் ஸ்வாமி அரங்கனின் கட்டளையை சொன்னபோது அரையருக்குத் தயக்கம்.
"வருவாரா நான் அழைத்தால்"
"திருவாய்மொழி சாதியும் (சொல்லும்) வருவார்.. என்று அரங்கன் சொன்னார்"
"திருவாய்மொழியா.. தெருவிலா"
வழக்கத்தை எப்படி மீறுவது என்கிற பதட்டம் இப்போது அரையருக்கு. நாலாயிரத்தில் திருவாய்மொழி மட்டும் வீதியில் சேவிப்பதில்லை (சொல்வதில்லை).
"உடையவருக்காக விதிகளை மீறலாம் என்றே அரங்கன் அருள்வாக்கு"
அப்புறம் என்ன. கிளம்பிப் போனார்கள். திருவெள்ளரையில் உடையவர் முன் அரங்கன் பிரசாதம் தந்து விட்டு சட்டென அரையர் திருவாய்மொழி சேவித்தபடி பின்னாலேயே நடந்து வர.. பாசுரத்தில் கட்டுண்டு இராமானுஜர் அப்படியே தொடர்ந்து வர.. முழு தூரமும் அரையர் பின்புறமாகவே நடந்து வந்தது வரலாற்று செய்தி.
அரங்கன் முன் பரிசனங்கள் கூடி விட்டார்கள். வில்லிதாசனும் பொன்னாச்சியும் நப்பின்னையும் மாறனும் உடையவரின் தரிசனம் திரும்பப் பெறப் போகும் மகிழ்வில் உணர்ச்சிப் பெருக்கில் இருந்தார்கள். அரையர் உடையவரைப் பார்த்தபடியே நடந்து வர.. பின்னாலேயே ஜோதிப் பிழம்பாய் இராமனுஜர்.
அரங்கன் சன்னிதானம் முன்பு வரும்போது மிகச் சரியாக
'இன்னுயிர்ச் சேவல்..' பாசுரம்.
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில்பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக்கூவுகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?

தலைவனைப் பிரிந்த தலைவி அவனை நினைவூட்டும் பொருட்களிடம் பிரிந்த துயரைச் சொல்லி பிரிவாற்றாமையால் புலம்பும் பாசுரம்!
திருமணத் தூணைப் பற்றிக் கொண்டு உபய விபூதியையும் அரங்கன் அருளால் பெற்ற உடையவர் கண்ணீர் மல்க நின்றபோது அத்தனை பேரும் அரங்கனையும் இராமானுஜரையும் தனியே விட்டு வெளியே வந்து விட்டார்கள்.
'பெருமானே.. நின் சந்நிதி கைங்கர்யம் சரிவர நடைபெறத்தானே அடியேன் அத்தனை ஒழுங்குகளையும் செய்ய முனைந்தேன்.. தேவரீர் இப்படி பரிசாரகர் பக்கம் பட்சமாய் என்னடியார் அது செய்யார், செய்தாகிலும் நன்றே செய்தார் என்றிருப்பது தகுமோ.. அதனாலன்றோ அடியேன் தங்கள் கடாட்சம் விட்டு அப்புறம் போக வேண்டியதாயிற்று..'
உடையவர் மனசுக்குள் அரங்கன் பேசினான்.
'கலங்காதே இராமனுஜா.. நான் ராஜா.. என் குடிமக்கள் என் பாதுகாப்பில் இருப்பவர்கள்.. என்னால் அவர்கள் மனம் நோக எதுவும் செய்ய இயலாது என்பதால்தான் உம்மை நியமித்தேன்.. இராமனாய் அவதாரம் எடுத்தபோது சபரி கையால் உணவருந்தவும், குகன்,சுக்ரீவன், விபீஷணாதிகளுடன் தோழமை கொள்ளவும் எம்மால் முடிந்தது.. அர்ச்சையில் இருக்கும்போது யாம் பட்டர், பரிசாரகர், ஸ்ரீபாதந்தாங்கிகள் இன்ன பிறருக்குக் கட்டுப் பட்டே இருப்பேன்.. என் செளலப்யத்தால்.. உச்சநீதிமன்றமாய் அதற்குத்தான் உம்மை நியமித்தேன்.. நீர் வரையறுக்கிற கோவிலொழுகு இனி எம்மையுமே கட்டுப் படுத்தும்.. எந்த பாகுபாடும் இல்லாமல் நீர் காட்டி வருகிற மனிதநேயம் இனி வருங்காலத்திற்கு ஒரு சாசனமாய் விளங்கும்.. உம்மை இனி எந்தக் காலத்திலும் பிரியேன்.. நீர் பரமபதித்தாலும்!'
அரங்கன் சந்நிதி கிளிகள் 'ரெங்கா.. ரெங்கா' என்று மிழற்ற.. கோவில் மணி தானாகவே ஒலி எழுப்பத் தொடங்கியது ஒரு புதிய சகாப்தத்தின் வரவைச் சொல்ல.

September 23, 2009

ஒரே ஒருவர் மட்டும் இல்லாமல் வீடு

தேடிக் கொண்டிருக்கிறேன்

எனக்கே எனக்காக

ஒரு ஸ்பெஷல் புன்னகையுடன்

வளைய வரும் ஆத்மாவை !

கடைசி தினம் வந்தவர்களும்

அப்படித்தான் சொன்னார்கள் ...

மறக்க முடியாமல் செய்து விட்டு

மறைந்து போன ஒரு ஜீவன்

இனி நினைவுகளால் வாழும்

நினைவுகளும் மரணிக்கும் வரை!

அத்தனை மனிதர்கள்

நிறைந்து கிடந்த

வீட்டை வெறுமையாக்கும்

சாதுர்யம் அந்த புன்னகைக்கே

சாத்தியமானது !

எதுவும்

சொல்லாமல் போய்விட்டாய் என்று

குறை சொல்ல முடியாது

வந்து விசாரிக்கும் மனிதர்கள் அத்தனை பேரும்

சொல்கிறார்கள்

நான் கற்றுக் கொள்ள வேண்டியவைகளை!

இருந்தபோது தொலைத்து விட்டேன்

இழந்தபோது தெரிந்து கொண்டேன்

உன் புன்னகையின் பெருமை !


September 22, 2009

அம்மா



ஐந்தாம் தேதி சனிக்கிழைமை இரவு மணி ஒன்று. அம்மா தன் செயல்பாடுகளை எல்லாம் நிறுத்தி கொண்டு விட்டதாய் டாக்டர் சொன்னார். ஐசியுவில் உள்ளே போய் பார்க்க இப்போது தடையற்ற அனுமதி. அம்மா நிம்மதியான மீளா உறக்கத்தில் . நான் வீட்டுக்கு போன் செய்தேன். 'இன்னும் ஒரு மணி நேரத்தில் அம்மாவுடன் வந்து விடுவதாக'. இன்று மாலை வரை அம்மாவுடன் நான் 'பேசியபோது' சொல்லிக் கொண்டிருந்தது 'நான் வெளியே தான்இருக்கேன். சரியா ' அம்மாவுக்கு என்ன புரிந்ததோ தலையாட்டினாள். சிஸ்டர் என்னை ஒரு அறையில் அமரச் சொன்னாள் சிறு வயசு பெண். மாலையில் பார்த்தபோது 'பாட்டி கிட்ட எந்த ஊருன்னு கேட்டேன். ஸ்ரீரங்கம்னு சொன்னாங்க . ' ஒன்பதரை மணிக்கு 'கஞ்சி வாங்கிகிட்டு வாங்க. அம்மாக்கு கொடுக்கலாம் ' சுடச்சுட கஞ்சியை கொடுத்து விட்டு 'இப்படியேவா கொடுப்பீங்க' என்று பாமரத் தனமாய் கேட்டேன். சிஸ்டர் முகத்தில் கனிவு. 'ஆற வச்சுதான்'. கஞ்சி என்ன ஆனதோ ? மாலை வாங்கிக் கொடுத்த மாத்திரைகள் அப்படியே திருப்பித் தரப்பட்டன. இரண்டரை மணிக்கு இரண்டாவது மாடியில் வீட்டில் ஹாலில் அம்மா படுத்திருக்க பக்கத்தில் நாங்கள். 'போய் வா அம்மா. எங்களால் தர முடியாத ஆனந்தம் உனக்கு வேறெங்கேனும் கிடைக்கக் கூடும் எனில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் ' படுத்திருந்த அம்மா முகத்தில் வேதனைகள் விலகிய அமைதி பார்த்து உள்ளூர நிறைவும், குறுகுறுப்பும்.