November 18, 2009

மழையில் நடக்கப் பிடிக்கும் எனக்கும்

மழையை எனக்கும் மிகவும் பிடிக்கும்.
சும்மா தூறிவிட்டுப் போகிற
சின்ன மழையிலிருந்து
வானம் பொத்துக் கொண்டு
ஊற்றும் பெரிய மழை வரை..
வரப் போவதை
வாசனையால் அறிவிக்கும்
சாமர்த்தியம் ..
மழை பெய்யும்போது
குடைக்குள் மறைந்து
நடக்கப் பிடிக்காது ..
சடசடவென தூறல் விழுந்ததும்
ஓடி ஒளிந்து கொள்ளாமல்
ஒரு சிங்கம் போல
வானத்திற்கு முகம் காட்டி
நடப்பது பரம சுகம்.
கால்கள் நனைய
மழை நீர் ஓட வேண்டும்.
எல்லா மழைகளுமே
வானத்தில் இருந்துதான்
என்கிற நினைப்பை
படிப்பு மாற்றியது..
பூமி நீர்
ஆவியாகிப் போனால்தான்
மழையாம் ..
நாம கொடுத்தாதான்
எதுவும் திரும்பக் கிடைக்கும்னு
வானம் சொல்லுது..
பூமி சொல்லுது ..
மழை சொல்லுது..
இப்ப உங்க மனசும் சொல்லுதா?!

3 comments:

Ananthasayanam T said...

மழையே எனக்கும் உன்னைப் பிடிக்கும்.

உன் சாரல் முதல் சாத்தல் வரை
உன் வாசனை முன்னறிவிப்பு முதல் வாசலில் தேக்கம் வரை
உன்னைக் குடைக்குள் மறைத்து ஒளியவும் மாட்டேன்
உன்னை உடைக்குள் சேர்த்து எறியவும் மாட்டேன்

உன்
சடசட தூறலுக்கு ஓடி ஒளியாமல்
சிங்கமாய் முகம் காட்டி மெல்ல நடந்தே -
கால்சட்டை கொலுசு கால்அணி ஓடம்
கூரை முற்றம் கொடி சுருணை
உடைந்த செங்கல் வீழ்ந்த பாழ்சுவர்
இவற்றோடு நானும் நனைவேன்

உன் தோற்றம் வானத்தில் அல்ல பூமியில் என்று
ஆசான் சொன்ன பாடத்தில் வந்தது ஒரு
இயற்கையின் நியதி இன்பத்தில் தூறலாய் -
கொடுத்தது எதுவோ கொள்வது அதுவே

CS. Mohan Kumar said...

//நாம கொடுத்தாதான்
எதுவும் திரும்பக் கிடைக்கும்னு
வானம் சொல்லுது..
பூமி சொல்லுது ..
மழை சொல்லுது..
இப்ப உங்க மனசும் சொல்லுதா?! //

அருமை. நல்லா இருக்கு.

அன்புடன் அருணா said...

மழை....அதுதான் கூட்டி வந்தது இங்கே.....மழை எங்கேயும் எப்போதும் அழகுதான்!