February 26, 2011

பாம்பு..


பாம்புகளுடனான என் அனுபவம் அத்தனை அதிகம் இல்லைதான். அது என்னவோ எனக்கு எதிரில் வர கொஞ்சம் பயப்படுகிறதோ என்று கூட தோன்றும்.
சின்னவயசில் .. எங்கள் தாத்தா வீட்டில் ஒரு வாழும் பாம்பு இருந்தது. ஐ மீன் .. அதுவும் எங்களோடு குடி இருந்தது. (மத்த பாம்பு வாழாவெட்டியா என்று குண்டக்க மண்டக்க கேட்கக் கூடாது) எங்கள் வீட்டு பூஜை அறைக்குள் மேலிருந்து தொங்கி ஆடிக் கொண்டிருக்கும். கையை தட்டி விட்டுத்தான் உள்ளே போவோம். வீட்டுக்கு எதிரே கோவில். அதன் கீழ்ப் பக்க நீர் வெளியேறும் ஓட்டை வழியாக கோவிலுக்கும் எங்கள் வீட்டுக்கும் அதன் பயணம்.
ஒரு முறை என் அம்மா மேல் விழுந்து விருட்டென்று ஓடி விட்டது.. அத்தனை உயர உத்திரத்தில் இருந்து விழுந்தும் இரண்டு பேருக்கும் ஒன்றும் ஆக வில்லை..
அடுத்த முறை (இப்போது நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேன்) அந்த பாம்பை பார்த்தபோது அதற்கும் வயசாகி விட்டது.
நகர முடியாமல் ஊர்ந்தது. பயத்தில் என் தாத்தாவை கூப்பிட ஓடி விட்டு திரும்பியபோது அதைக் காணோம். அப்புறம் அதை நான் பார்க்கவே இல்லை.
அடுத்த முறை கல்லூரி விட்டு ரெயிலுக்கு திரும்பிய போது ஒரு பச்சைப் பாம்பு .. கூட வந்தவர்கள் வீர சாகசமாக அடித்த போது எட்டி நின்ற எனக்கு தடுக்கவும் இயலாமல் ரசிக்கவும் முடியாமல் ஒரு அவஸ்தை.
அலுவலகத்தில் ஒரு நண்பர் - பாம்புகளோடு சிநேகிதம் வைத்திருப்பவர்...
பாம்பு பற்றிய என் பயம் சொன்னதும் பேன்ட் பக்கத்தில் கை விட்டு எடுத்தார்.
பாம்பு!
அவர் வீட்டில் மிக சகஜமாக பாம்புகளோடு இருப்பவராம்.
அவர் குழந்தைகளுக்கு பயமே கிடையாதாம்..
அலுவலகத்தில் கம்பியூட்டர் அறையில் எப்போதாவது ஓய்வெடுக்க வரும் பாம்புகள் பிடிபட்டதும் மெயிலில் படத்துடன் தகவல் வரும்.
பிரிமனை என்று நினைத்து சுருண்டு படுத்திருந்த வீட்டு பாம்பின் மீது கொதிக்க கொதிக்க பால் பாத்திரத்தை வைத்து விட்டார் அந்த வீட்டு பாட்டி.
பிறகு வழக்கமாய் வரும் பாம்பைக் காணாமல் திகைத்த போது செத்து போயிருந்தது தெரிந்தது. பின் அவர்கள் வீட்டில் முதல் பிள்ளைக்கு 'நாகநாதன் ' என்று பெயர் வைப்பது வழக்கமாம் .. அவர்கள் வீட்டு வாரிசு என் நண்பன் ..
பாம்பென்றால் சுவாரசியமும் கூட..








February 20, 2011

ஜீவிதம்


பாதைகளைச் செப்பனிட்டு

பல காலம் ஆகிவிட்டது ..

முட்களும் புதர்களுமாய்

வழி நெடுக

போகும் வழி அடைத்து ..

எவரும்

கண்டறிந்து வரக் கூடுமென

எதிர்பார்க்க முடியவில்லை..

இப்போதெல்லாம்

கண்ணில் படுவதைக் கூட

நிராகரித்துச் செல்லும்

மனிதர்களே அதிகம்..

என்றோ ஒரு நாள்

யாரேனும்

வரக் கூடுமென

தனக்குள் முனகலுடன்

புற்றெழுப்பிக்

காத்திருக்கிறது

என் அன்பெனும்

ஜீவிதம்.


(வடக்கு வாசல் - பிரசுரம்)

February 18, 2011

சார்மினார் சலோ

முன்பெல்லாம் ஊர் போவதென்றால் உற்சாகமாய் இருக்கும். இப்போது சரியான துணை கிடைத்தால் தான் சுவாரசியம் என்றாகி விட்டது.
தனியாக ஊர் சுற்றி இருக்கிறேன். பேனா நட்பைத் தேடி. அத்தனை நாட்கள் கடிதங்கள் மூலம் பழகிய நண்பர்களை நேரில் பார்க்கும்போது விட்டுப் பிரியவே மனசு வராது.
இப்போது கடிதம் இல்லாத .. அலைபேசியில் ஒப்புக்கு பேசும் மன நிலையில் (ஏதேனும் ஒரு அலுவலை கையில் வைத்துக் கொண்டு சட்டென்று பேசி முடித்து விடும் மனநிலையை சொன்னேன் ) இப்படி அலுவலக நிமித்தம் நண்பர்களுடன் போவதில் பழைய உற்சாகம் திரும்பி விட்டது.
நாம் சோர்ந்தால் கூட அவர்கள் நம்மை பிடித்து இழுத்து போகும் போது என்னமாய் ஒரு துள்ளல் மனசுக்குள் !
சுகுமார், மகேஸ்வரன் இருவரும் என்னுடன் வந்திருந்தார்கள். அவர்களுடன் தான் இந்தப் பயணம்.
மூன்று நாட்கள் அலுவலக வேலை முடிந்து நாலாம் நாள் மாலை ரெயிலை பிடிக்க வேண்டும். காலையில் சார்மினார் போனோம்.
அதற்கு முன் வரை சார்மினாரை ஏதோ தாஜ்மகால் ரேஞ்சுக்கு நினைத்திருந்தேன். வெறும் நான்கு பெரிய தூண்கள் போல ஒரு கட்டிடம்! அவ்வளவுதான். அதுவும் படு அழுக்கு. ஒருத்தர் மட்டும் மேலேறி செல்லும் அளவு மாடிப்படி போல படிக்கட்டுகள். மேலே போனால் வட்டமாய் சுற்றி வரும் அளவுக்கு வராண்டா ..

சார்மினாரின் உட் புறத் தோற்றம் ..




மேலே நின்று பக்கவாட்டில் சார்மினார் தோற்றம்.




சார்மினார் உள்ளே நின்று கீழே சாலையை படம் பிடித்த போது..




சார்மினாருக்கு எதிரே அழகான மசூதி !




பின்னர் சாலர்ஜங் மியூசியம் போனோம். மஸ்லின் துணி அணிந்த பெண் சிலை கொள்ளை அழகு. தலையை சுற்றி முக்காடு போட்ட தோற்றம். அந்த சிலை வடித்த சிற்பி நிஜமாகவே ரசனைக் காரர். எப்படித்தான் சாத்தியமாயிற்றோ. அந்த பெண்.. அவளுடலைத் தழுவி மஸ்லின் துணி.. எல்லாம் அதே சிலையில். சொன்னால் புரியாது. பார்த்து ரசிக்க வேண்டும் அந்த அழகை.
இன்னொரு சிலை முன் புறம் ஒரு வயதான வீரர்.. பின்புறம் அதே சிலையில் அழகான பெண்.. பின் பக்கம் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். பெண்ணின் உருவம் அதில் தெரிகிறது கிபி ஒன்று .. இரண்டாம் நூற்றாண்டு சிற்பங்கள் எல்லாம் காட்சியில். போட்டோ எடுக்க அனுமதி இல்லை.. பழைய காலக் கடிகாரம் ஒன்று.. பனிரண்டு மணிக்கு அதனுள் இருந்து ஒருவர் வெளியே வந்து மணி அடிக்கும் காட்சிக்கு அந்த ஹால் முழுவதும் கூட்டம் காத்திருந்தது.. வேடிக்கை பார்க்க. இன்று வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அதிசயம்.
பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..
எங்களை நன்றாக வைத்திருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு ஸ்பெஷல் நன்றி!



February 16, 2011

என் டி ஆர் பார்க்

போகும் போதே ரயிலில் ஒரு சுட்டிக் குழந்தை .. சுந்தரத் தெலுங்கில் மழலை பேசி எங்களைக் கவர்ந்து விட்டது.
என்ன கொடுமை என்றால் எங்களுக்கு அந்தக் குழந்தை பேசியது புரியவில்லை. நாங்கள் பேசிய தமிழ் அதற்குப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் வந்து எங்களை சீண்டிக் கொண்டிருந்தது. பூமிகா சின்ன வயசில் இப்படித்தான் இருந்திருப்பார் என்று சினிமா ஞானம்இல்லாத நண்பரிடம் சொல்ல .. 'உங்க சிஸ்டரா ' என்றார் அப்பாவியாய்.
எல்லா யுனிட்டிலிருந்தும் வந்த அலுவலர்கள் ஏதோ பேய் பிடித்த மாதிரி கணக்கு போட .. நான் மட்டும் எப்போது சுற்றிப் பார்க்க போகலாம் என்று அரித்துக் கொண்டிருந்தேன். முதல் நாள் ஹோட்டல் திரும்பியதே இரவு ஏழரைக்கு .
அதனால் எங்கும் போக முடியவில்லை. அலுப்பு வேறு.

மறுநாள் மாலை பிர்லா மந்திர் போனோம் . தமிழகக் கோவில்கள் பார்த்த கண்களுக்கு அது ஏதோ எக்சிபிஷன் பார்த்த பீலிங் .

அதற்கு அடுத்த நாள் ஹுசைன் சாகர்.. லும்பினி பார்க் .. என் டி ஆர் பார்க்..

அந்த ஏரியில் நடுவே மிகப் பெரிய புத்தர் சிலை. ஸ்பீட் போட்டிங் போனோம்.

அதற்கு முன் லைப் ஜாக்கட் கொடுத்து போட்டுக் கொள்ள சொன்னதும் சற்றே மிரண்டேன். சாக்கடை போல தண்ணீர் .. அதில் யார் விழறது?

நிலாவில் இறங்கிய மனிதன் போல மஞ்சள் ஜாக்கட்டுடன் மூன்று பேரும் அடுத்தவரைப் பார்த்து சிரித்துக் கொண்டோம்.

உண்மையிலேயே த்ரில்லிங். சும்மா சர்ர்ரென்று போட் கிளம்பி புத்தரை ஒரு சுற்று சுற்றி திரும்பியதும் .. அந்த ஐடியா கொடுத்த நண்பருக்கு கை கொடுத்தேன்..

என் டி ஆர் பார்க்கில் சம்பத் என்கிற சுவாரசியமான இளைஞன் .. தாவரவியல் நிபுணன் ..








பாலைவனப் பகுதிகளில் வளரும் தாவரங்களுக்காக ஒரு பகுதி அவன் மேற்பார்வையில். ஒவ்வொரு செடி.. கொடியை விலாவரியாய் விவரித்து அடுத்த பகுதியான போன்சாய் தொட்டிகளையும் காட்டினான்.

'இது பன்னண்டு வருஷம்.. இது இருபத்தஞ்சு வருஷம் .. ' என்று அவன் சொன்னது எல்லாம் என் இடுப்பு உயரம் கூட இல்லை.

'பிடிச்சிருக்கா ' என்றான். நான் ' கஷ்டமா இருக்கு மனசுக்கு ' என்றேன். அதற்கு பின்..

பூக்கள் .. பூக்கள்.. ஹப்பா.. எத்தனை அழகு..




அப்படியே சுற்றி வந்தோம் அலுப்பு போன இடம் தெரியவில்லை.. நுழை வாசலில் மிகப் பெரிய நந்தி.. 'அட நம்ம ஆளு.. '





நடந்து நடந்து கால் வலி .. இப்பதான் தெரியுது.. கொஞ்சம் ரெஸ்ட் .. ஓக்கேவா .. சார்மினார் பத்தி அடுத்த பதிவுல..

February 14, 2011

ஹை ஹைதராபாத்



அலுவலக வேலை நிமித்தமாக ஒரு வாரம் ஹைதராபாத் பயணம். தங்கும் வசதி அவர்களே ஏற்பாடு செய்து விட்டார்கள். கோல்கொண்டா ஹோட்டலில் ..

அறைக்குள் நுழைந்தால் ..




பாத் ரூமிற்கு கண்ணாடி சுவர்! குளியல் அறையும் அதற்குள் .. கண்ணாடி சுவருடன்.



இப்படி முதல் அனுபவமே வித்தியாசமாய்.. நடுநடுவே மாலை ஏழு மணிக்கு ஹோட்டல் திரும்பியதும் ஊர் சுற்றிய அனுபவம்..
ஆட்டோக்காரர்கள் சாதாரணமாய் ஒரு இடத்திற்குப் போகவர நூறு ரூபாய் கேட்டால்.. அவர்கள் சொல்கிற கடைக்கு வரச் சம்மதித்தால்.. பாதி கட்டணம் போதும் என்கிறார்கள். ‘சும்மா வாங்க.. அஞ்சு நிமிஷம் கடைக்குள்ர போயிட்டு வந்தா போதும்.. அம்பது ரூபா கொடுங்க’
நிஜமாகவே அதே போலத்தான். முத்து பேமஸ்.. முத்துக்கள் விற்கும் கடைக்குள் போய் எதுவும் வாங்காமலேயே பாதிக் கட்டணம்!

தொடரலாம்..

February 07, 2011

வாரிசு

என் புத்திக்கு எட்டியவரை எதுவும் தப்பாய் சொன்ன மாதிரி தெரியவில்லை .

ஆனால் எதிரில் நின்றவர் முகம் கோணி விட்டது.

"அப்புறம் பார்க்கலாம் " என்றேன்.

"உங்கப்பாவும் நானும் ரொம்ப பழக்கம் .. சின்ன வயசுல.."

இடை மறித்தேன்.

"அதெல்லாம் பழைய கதை.. இப்ப அப்பாவும் இல்ல. உங்கள நான் பார்த்த நினைப்பும் இல்ல.."

புனிதா எட்டிப் பார்த்து விட்டு போனாள். எனக்கு அவள் கொடுத்த டைம் பத்து நிமிஷம் தான். ஏற்கெனவே இரண்டு நிமிஷம் லேட் .

வந்தவர் அப்படி ஒன்றும் சுலபமாய் திரும்பிப் போகிறவராய் இல்லை.

"எல்லா எடமும் முயற்சி பண்ணிட்டேன்பா.. கடைசியா உங்கப்பா நினைப்பு வந்தது.. அவர் இருந்தா இப்படி நான் அலைய வேண்டியிருக்காது.."

அந்த நிமிஷம் என் நாக்கில் சனி ..

"அப்படின்னா இதுக்கு முன்னால எவ்வளவு வாங்கி இருக்கீங்க .. எவ்வளவு திருப்பித் தராம ஏமாத் .. திருப்பி தர வேண்டியிருக்கும் "

முகத்தில் சவரம் செய்யப் படாமல் நான்கு அல்லது ஐந்து நாட்களாய் தாடி. வேட்டி ஒன்றும் அத்தனை புதிது இல்லை. கண்கள் அதன் ஒளி இழந்து எத்தனையோ நாட்களாகி விட்ட பிரமை. என் வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் முகம் கோணி விட்டது.

கை கூப்பினார். நடை தள்ளாடியது.

“வரேன்பா” லேசான முனகல் மட்டும்.

புனிதா மறுபடி வந்தாள்.

“என்ன போயிட்டாரா.. “

“ம்”

“உங்கப்பாக்கு வாரிசா அள்ளிக் கொடுக்கப் போறிங்கன்னு நினைச்சேன்.”

“ம்”

“எப்படித்தான் கூசாம மனுசங்க வந்து நிக்கிறாங்களோ”

“பாவம்.. அவருக்கு என்ன கஷ்டமோ..”

“ஏன் கொடுக்கலன்னு மனசு பிறாண்டுதா”

“ப்ச்”

“உள்ளே வாங்க.. மறுபடி யாராச்சும் பிடிச்சுக்கப் போறாங்க.. தர்மப் பிரபுவ”

உள்ளே வந்து சட்டையைப் போட்டுக் கொண்டேன். தலையை தடவிக் கொண்டே. உள்ளே நுழையும் போதே நிலைப் படியில் நங்கென்று இடித்துக் கொண்டதால்.

“எங்கே கிளம்பிட்டிங்க”

“ம்ம்”

“அதே குணம்.. என்ன கேட்டாலும் பதில் வராது..”

என் நடைக்கு அவரை எட்டிப் பிடிப்பது சிரமமாய் இல்லை. தளர்ந்து போய்க் கொண்டிருந்தார். கைகள் தாமாகப் பிரிந்து மடங்கி.. நடுநடுவே வானத்தைக் காட்டி.. அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டு போனதை சிலர் வேடிக்கையும் பார்த்தார்கள்.

குறிப்பிட்ட இடைவெளியில் அவரைப் பின் தொடர்ந்து போனேன்.

ஹாஸ்பிடல் வாசலில் மரத்தடியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தார். பெருமூச்சு விட்டார். தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.

‘என்ன பண்ணப் போறேன்.. நாலாயிரத்துக்கு நான் எங்கே போவேன்..’

தேம்பியது தெளிவாகக் கேட்டது.

‘நான் உன்னைக் காப்பாத்த முடியலடி.. சரசு.. ‘

சட்டைக்குள் ஒடுங்கிய மார்பு.. எலும்புக் கூடாய் துருத்தி துடித்தது தெரிந்தது.

‘ரெங்கா.. ஏண்டா எனக்கு முன்னாடி போனே.. நான் அனாதையாயிட்டேன் டா”

ரெங்கா.. அப்பாவின் பெயர். ரெங்கனாதன்.

புலம்பிக் கொண்டிருந்த அவர் முன் நான் போய் நின்றது அவருக்குப் புரியவில்லை. யாரோ வரும் வழியில் தாம் நிற்பதாய் நினைத்து நகர்ந்து அமர்ந்தார்.

அவர் முன் குனிந்து கைகளைப் பற்றிக் கொண்டேன்.

“யாழு.. “

”வாங்கோ.. பீஸ் கட்டிடலாம்..”

“நீயா..”

சட்டென்று என் கையை உதறினார். அவர் உடம்பு அதிர்ந்தது.

“என்னை மன்னிச்சிருங்கோ. பிளீஸ் ..”

அவர் பேசவில்லை. என்னுடன் பேசப் பிடிக்கவில்லை என்று புரிந்தது.

“நான் பண்ணது தப்பு.. “

என்ன வேண்டுமானால் சொல்லிக்கோ.. என்கிற மாதிரி அவர் பாவனை.

“அப்பா இருந்தா என்னை மன்னிக்கவே மாட்டார்..”

அப்படியே உடைந்து அழுதேன். என்னிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவருக்குப் புரியவில்லை.

”தயவு செஞ்சு வாங்கோ.. முதல்ல மாமியைப் பார்க்கலாம். அப்புறம் என்னை என்ன வேணாப் பண்ணுங்கோ..”

அரை மனதாய் எழுந்தார். இருவருமாய் உள்ளே போனோம்.

அவரைப் பார்த்ததும் மாமி முகத்தில் மலர்ச்சி.

நான் முந்திக் கொண்டேன்.

“ மாமி.. கவலைப் படாதீங்கோ.. சீக்கிரமே வீட்டுக்குப் போயிரலாம்..”

“பணம் கட்டியாச்சா”

“ம்.. இப்பதான்.. தெம்பு குறைச்சல்தானாம்.. ரெண்டு நாள்ல சரியாயிரும்..”

”பாவம்.. என்னால அவருக்குத்தான் கஷ்டம்”

“யாராலயும் யாருக்கும் கஷ்டம் இல்லை மாமி.. உங்களுக்கு முடியலன்ன உடனே அவர் தவிச்சுப் போயிட்டார்”

அந்த நிமிஷம் இருவரும் பார்த்துக் கொள்ளக் கூட இல்லை. ஆனால் மனசு லயித்த அதிர்வு தெரிந்தது.

வெளியில் வந்தோம்.

“என்னை மன்னிச்சிருங்கோ.. எப்ப வேணா எங்க வீட்டுக்கு வரலாம்.. எதையும் மனசுல வச்சுக்காம”

என்னைப் பார்த்தார். என் கண்களை.

“புரியல”

“ வரேன்பா” என்றேன்.

தலை லேசாய் புடைத்திருந்த வலி. கிளம்புமுன் இடித்துக் கொண்ட போது ‘அப்பா’ என்றுதான் மனசுக்குள் அலறினேன். அப்பா. ரெங்கா. வீடு தேடி வந்தால் நிராகரிக்காத ஆத்மா. நம்பிக்கையாய் வரலாம் அவரைத்தேடி.

அவருக்குப் புரியவில்லை. வீட்டுக்குள் வந்தால் புனிதாவும் சொன்னாள்.

“லூசா நீங்க”

“ம்”

தலையை அழுத்தித் தேய்த்துக் கொண்டு உள்ளே போனேன்.

ஹால் புகைப்படத்தில் அப்பாவின் மாறாத புன்னகை அந்த நிமிஷம் என்னை ஆசிர்வதித்த மாதிரி உணர்ந்தேன்.

(அவரைத் தேடிப் போய் ஏன் உதவி செய்தேன் என்று அவர்களுக்குத்தான் புரியவில்லை. இதை வாசிக்கிற உங்களுக்குப் புரிந்தால் எனக்கு சந்தோஷம்)

February 05, 2011

லவர்ஸ் டே

கல்யாண மண்டபத்தில் கவனித்தேன். பாட்டி இலையில் போட வந்த ஜாங்கிரியை கையில் வாங்கிக் கொண்டார்.

'தாத்தாக்கு ரொம்பப் பிடிக்குமாம்'

அவரால முன்ன மாதிரி நடக்க முடியல. இவங்க ரொம்ப வற்புறுத்தி அழைச்சா .. என்னை மட்டும் போயிட்டு வரச் சொன்னார். செத்த ஆட்டோ பிடிச்சு தரியாடா..

என் டூ வீலர்ல ஒக்கார்ந்து வரேளா..

விழுந்துருவேண்டா

மாட்டிங்க .. நா மெதுவா போறேன்.. ஆட்டோ பிடிக்க அரை பர்லாங் போகணும்.

பாட்டியிடம் கஸ்தூரி மஞ்சள் வாசனை. வாலிபத்தில் நிச்சயம் தெருப் பையன்களை கலக்கி இருந்திருப்பார்.

தயங்கினாரே ஒழிய சகஜமாய் உட்கார்ந்திருந்தார். துளி ஆட்டம் இல்லை. பதவிசாய் பல நாள் போன ஜோரில் வந்தார்.

வீட்டு வாசலில் இறக்கி விட்டதும் உள்ளே வரச் சொன்னார். தாத்தா பார்க்கணுமாம்.

'பட்டுப் பொடவையை அப்புறம் எப்ப கட்டறது அவ.. ' என்று கிண்டலடித்தார் தாத்தா.

ஜாங்கிரியை கொடுத்ததும் அவர் முகத்தில் ஒரு பளீர்.

'உன்னை பக்கின்னு நினைச்சிருப்பா ' என்றார் அப்பாவும் விடாமல்.

எனக்கு டம்ளர் நீர் . அதுவும் ஜில்லுன்னு தரலாமா என்று கேட்டு.

சற்றே பெரிய வீடு. இவர்களைத் தவிர யாரும் இல்லை. தாத்தா உயரம் . பருமன். பாட்டி குள்ளம். தாத்தா தளர்ந்திருந்தார். எழுந்து நடக்க பிரயத்தனம் . பாட்டி விசுக் விசுக்கென்று நடை.

அந்த நாளைய புகைப்படங்கள். கருப்பு வெள்ளை. கோவில் யானை முன் பெரிய கூட்டமாய் மனிதர்கள். ஒருத்தரைக் காட்டி தாத்தாவோட அப்பா என்றார் பாட்டி.

தாத்தாக்கு சாப்பாடு ? என்றேன்.

கஞ்சி தான்..

நீ ஒரு டம்ளர் சாப்பிடறியா .. தேவாமிர்தமா இருக்கும்..

தாத்தா எது சொன்னாலும் ஒரு நையாண்டி. அதற்கு பாட்டி அலட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு புன்சிரிப்பு மட்டும்.

புழுங்கரிசிக் கஞ்சி தான். நார்த்தங்காயை லேசாக கரைத்திருந்தார். நாக்கு இனித்தது.

மீண்டும் தண்ணீர் டம்ளர். 'எது சாப்ட்டாலும் வாயை கொப்பளிச்சிடு' என்று இதமாய் ஒரு அட்வைஸ்.

'வரேன்' என்றேன்.

பாட்டி வாசல் வரை வந்தார் தடுத்தும் கேட்காமல்.

'பசங்க வெளியூரா'

'இல்லடா .. இங்கதான்'

இவர்களைத் தனியாக விட்டா.. என் புருவம் ஏறி இறங்கியது.

'நீயும் ஒருத்தன்டா '

என் கன்னத்தை செல்லமாக வழித்தார். நான் அழுதிருக்க வேண்டும். திரும்பும் போது பாதை மறைத்தது.

'என்ன லவர்ஸ் டே கொண்டாடிட்டு வரீங்களா.. '

வீட்டு வாசலில் நின்று வழி மறைத்து பாதி கோபமாய் மனைவி கேட்டாள்.

'ஆமாம் ' என்று தலையசைத்தபோது அதில் உண்மை இருந்தது.