November 30, 2011

கொள்ளிடக் குளியல்


பல வருடங்களுக்கு முன் அந்த மூன்று நாட்கள் கழித்து வீட்டுப் பெண்கள் கொள்ளிடம்தான் குளிக்கப் போவார்கள். அதுவும் விடியற்காலை நாலரை.. ஐந்து மணி நேரத்தில்.

80.. 90 என்று வயதானவர்கள் கூட இன்னமும் காவிரி, கொள்ளிடம் என்றுதான் ரெகுலராகக் குளிக்கப் போகிறார்கள். அவர்கள் திடமாய் இருக்கிறார்கள் இப்போதும்.

நாச்சியார் பாட்டி 90 வயதிலும் கொள்ளிடம் போனார். தெருப் பெண்கள் பாட்டியிடம் தான் துணை தேடுவார்கள்.

இரவில் படுக்கப் போகுமுன் மறுநாள் புரொகிராம் சொல்லக் கூடாது என்று ஒரு நம்பிக்கை. 'பிழைத்துக் கிடந்தால்' (அ) 'பிச்சைக்காரம்' என்பார்கள்.

பிச்சைக்கும் மறுநாளுக்கும் என்ன சம்பந்தம் என்று முதலில் (இப்போதும்) புரியவில்லை. மறுநாள் உயிருடன் இருப்பதே அவன் போட்ட பிச்சை என்பதாலா?

இந்த சம்பவம் பிறர் சொல்லிக் கேட்டதுதான். இதை நிரூபிக்க நாச்சியார் பாட்டியும் இல்லை.

ஒரு முறை அடுத்த வீட்டுப் பெண் நாச்சியார் பாட்டியிடம் முதல் நாள் இரவு சொன்னாளாம்.

'பாட்டி.. நாளைக்கு என்னையும் கூட்டிண்டு போங்கோ'

பாட்டி சம்மதித்து இருக்கிறார். மறுநாள் விடியற்காலை பாட்டி எழுப்பியிருக்கிறார்.

"வரியா"

இவளும் பின்னாலேயே போனாள். கொள்ளிடம் வந்தாச்சு.

போகிற வழியில் வழக்கமாய்ப் பார்க்கிற பால்காரர், இதர இம்மாதிரி குளியல் பெண்கள் யாருமில்லை.

வெறிச்சோடிய கொள்ளிடம். துணிகளை அலசி குளிரில் முக்கி எழுந்து 'பாட்டி.. போலாமா'

ஹா. நாச்சியார் பாட்டியைக் காணோம்.

சொல்லாமல் போயிட்டாளா..

வேகம் வேகமாய் நடந்து வந்தால் வடக்கு வாசல்.. சித்திரை வீதி.. இதோ வீடு.. பாட்டியைக் காணோம்.

இவள் சரியாக வீட்டு வாசலில் வந்து ஈரத் துணிகளுடன் நிற்க.. நாச்சியார் பாட்டி மெதுவாய் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து " என்னடி.. என்னை அழச்சிண்டு போச்சொல்லிட்டு நீ போய் குளிச்சுட்டு வந்துட்ட' என்றார் நிதானமாய்.

பா..பாட்டி.. அப்ப அது நீங்க இல்லியா.. தொப்பென்று கீழே விழுந்தவளை அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் போனார்கள். ஒருவாரம் காய்ச்சலில் கிடந்து பிழைத்தாளாம்.

த்ரில்லர் கதைகள் இப்படித்தான் எங்களுக்கு அறிமுகமானது. நாளைக்கு என்று சொல்லாமல் இப்போதே என்று மறைமுகமாய் சில விஷயங்களை செய்ய பழக்கி விட்டார்கள்.

இப்போது கொள்ளிடம் போக வெளிச்சம் வரவேண்டும்.

அந்த நாள் பெண்கள் என்ன துணிச்சலாய் இருட்டில் போய் வந்திருக்கிறார்கள்.. பிரமிப்பாய்த்தான் இருக்கிறது.



November 29, 2011

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல


வடக்கு அடையவளைந்தான் வீதி முனீஸ்வரன் கோவில் ரொம்ப பிரசித்தம். மதில் மேல் நள்ளிரவில் முனி ஜல் ஜல் என்று உலா வருவார் என்கிற ரீதியான கதைகள் சின்ன வயசில் எங்களுக்கு பயம் காட்ட உதவின.

பாத்ரூம் போக இச்சை வருமுன்னே ஐந்து நிமிடம் முன்னதாகக் கிளம்பி வீட்டின் பின்புற டாய்லெட்டை (ஓப்பன் யூனிவர்சிட்டி) அடைய வேண்டும். அத்தனை தூ..... ரம்.

ஆறு குடித்தனம் இருந்தோம் அப்போது. வாடகை.. சொன்னால் நம்ப மாட்டீர்கள். வெறும் அஞ்சு போட்டு ஒரே சைபர். அத்திம்பேர், சித்தப்பா, மாமா என்று எல்லாமே எங்கள் வம்சம்.

இதைத்தவிர இரண்டு மாடுகள். வாசலில் சாணி போட்டு வாசல் தெளிக்க உதவியாய். காலையில் யாரேனும் ஒருத்தர் மாட்டை ஓட்டிக் கொண்டு கொள்ளிடம் போய் மூவருமாய்க் குளித்து விட்டு வருவார்கள்.

வரும் வழியில் அகத்திக் கீரை, வாழைப்பழம் எல்லாம் ஆசையாய் மென்று கொண்டே வரும். மாமிகள் (மாமாக்களும்) கோமாதாவைச் சுற்றி வந்து பின்பக்கம் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள்.

ஓட்டிக் கொண்டு வரும் மாமா பையன் அசப்பில் கிருஷ்ணபரமாத்மா மாதிரி தெரிந்தது எங்கள் பிரமைதான். காலப் போக்கில் மாடு சாணியும் கோமியமும் மட்டும் அதிகமாய்க் கறக்க ஆரம்பிக்க அரை டம்ளர் பாலுக்கு ஏன் இத்தனை அவஸ்தை என்று விற்று விட்டார்கள்.

வீட்டை ஒட்டி பிரசன்னா ஸ்கூல். இடைவெளியில் காம்பவுண்டின் முற்றுப் பெறாத சுவர் வழியே வீட்டின் பின் பக்கமாய் சமையலறைக்கு வந்து விடலாம். எண்ணையில் ஏதேனும் பொறிக்கிற வாசனை மூக்கைத் தொடும் தூரத்தில் வகுப்பறை.

"போடா டீச்சர் திட்டுவாங்க"

"ரெண்டு பஜ்ஜி அவங்களுக்கும் கொடும்மா"

கதை பஜ்ஜி பற்றி அல்ல. என் இளமைப் பருவத்தில் சந்தித்த புஜ்ஜி பற்றி.

முதலில் வீட்டை பற்றி ஒரு அறிமுகம். வாசல் கதவு ஒரு கொண்டி போட்டு உள்பக்கம், வெளிப்பக்கம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திறக்கிற சேப்டியில் இருந்தது.

வலது கைப் பக்கம் சின்ன திண்ணை ஒருவர் மட்டும் படுக்கிற அளவில். இடது கைப்பக்கம் ஐந்தாறு பேர் படுக்கிற பெரிய திண்ணை. அதை ஒட்டி மாடிப் படிக்கட்டு. ஒருவர் மட்டும் ஏறலாம்.

அங்கே இரவில் யாரோ அழும் குரல் கேட்பதாய் கதை சொல்லப்பட்டு படிக்கட்டு முடியும் இடத்தில் படுக்க யாரும் தயாராய் இல்லை. இதற்காகவே எட்டு மணிக்கே ஓடிப் போய் இடம் பிடித்து விடுவோம்.

கடைசியாய் வரும் (பாவம், வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவி விட்டு வருவாள்) என் தங்கை மட்டும் விளக்குமாறு போட்டுக் கொண்டு படுப்பாள். அப்புறம் அறைகள், பெரிய ரேழி, ஹால், மறுபடி ஒரு ரேழி, கிச்சன், இன்னொரு குட்டி கிச்சன் (ம்ம்.. மூச்சிரைக்கிறது) கட்டியவர் நிச்சயம் அந்தகால ராஜா பரம்பரை. இல்லாவிட்டால் கண்டு பிடிக்க முடியாதபடி இத்தனை அறைகளுடன் (மாடியிலும் நான்கு அறைகள்)கட்டி வைப்பாரா.

தஞ்சாவூர் பாணி ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஓவியம் ஒன்று ஹாலில் மேலே மாட்டியிருக்கும். மூன்றாவது ரேழியின் சமையல் புகை பட்டு கறுப்படித்த சுவரில் வெள்ளை சாக்பீசில் 'கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..' தான் முதலில் நான் பார்த்த காதல் பாட்டு.

எங்கள் வீட்டில் நிறைய "கண்ணன்" கள். பெரிய கண்ணன், சின்ன கண்ணன், வடலூர் கண்ணன்.. இதைத் தவிர தெருவில் பாட்டி கண்ணன், லூட்டி கண்ணன், சீயக்காய்ப் பொடி கண்ணன்.. பெயர்ப் பஞ்சம் நிலவிய காலம்!

எல்லா இடங்களிலும் மாடப் பிறைகள். அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள் கார்த்திகை நாட்களில்.

ஒரு பிறையில் எட்டாய் மடித்து வைக்கப்பட்ட காகிதம் தற்செயலாய் என் கண்ணில் பட்டு ஆறு வயசுக்கு இத்தனை ஆர்வக் கோளாறு இருக்கக் கூடாது.

காணாமல் போக வீட்டில் நிறைய இடம் இருப்பதை ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அந்தக் காதல் கடிதம் தான் என் வாழ்க்கையில் முதன் முதலில் எழுத்துலகை அறிமுகப் படுத்தியது.

துல்லியமாய் வரிகள் நினைவில் இல்லை. அது காதல் பிரபோசல் என்று மட்டும் புரிந்தது. அத்திம்பேரின் தங்கை மாமாவின் பையனுக்கு எழுதியது. என்ன செய்வது என்று புரியவில்லை.

இரண்டு பேருக்கும் அது போஸ்ட் பாக்ஸா.. நான் தவறுதலாய் அத்து மீறி விட்டேனா.. யோசிக்கும் வயசில்லை.

என் திருட்டு முழியை அம்மா அடையாளம் கண்டு விசாரிக்க உளறிவிட்டேன். லெட்டர் பறிமுதல் ஆனது. அப்புறம் மாமா பையன் யாரையோ கல்யாணம் செய்ய.. எழுதியவள் வேறு இடத்தில் மணமாகிப் போக.. இப்போது அவள் உயிருடனும் இல்லை.

இன்றும் எப்போதாவது ஞாபகம் வந்து அந்த உறுத்தலில் என் தூக்கம் கெட்டுப் போகிறது.

அந்தக் கடிதத்தை எடுத்த இடத்திலேயே வைத்திருக்க வேண்டும்.. இன்று வரை தீராத சந்தேகம்.. அவள் காதல் அவனுக்குத் தெரியுமா?

ஒரு தொலைபேசி அழைப்பில் பதில் தெரிந்து விடும். இததனை வருடம் கழித்து தூங்கிக் கொண்டிருக்கும் பூதத்தை ஏன் எழுப்ப வேண்டும்..








November 27, 2011

மழைத் தொடர்பு


யார் என்ன சொன்னாலும்

என் மறதி குறித்த

கேலி விமர்சனங்களின் மீதே

கால் பதித்து நடந்து

குடையை மறந்து

வீட்டை விட்டு

என் பயணங்கள்..

எனக்கும் வானுக்குமான

மழைத் தொடர்பின்

ரகசியம்

சற்றே கிட்ட வரும்

இனிய நட்பிற்கு மட்டும்

காதோடு சொல்வேன்..

ஒரு முறை நனைந்து பார்த்தால்

பின் எந்த ஒரு நாளிலும்

வெளிக் கிளம்புமுன்

புத்தி குடையைத் தேடாது..

மனசின் ராகம் மட்டுமே

கேட்கும்

பெய்யும் மழையின் ஜதிக்கு.




November 26, 2011

குட்டி நாய்


அலுவலக வாசலில் பஸ்ஸை விட்டு இறங்கியபோது மழை விட்டபின்னும் மழை!

வழக்கம் போல குடை எடுத்துப் போகவில்லை.

“வரீங்களா” என்று கேட்ட நல்ல உள்ளத்தைப் பார்த்து புன்சிரித்து தூறலை மேலே வாங்கி நடந்தேன்.. இல்லை.. நின்று விட்டேன்.

நாலடி முன்னால் அந்த நாய்க்குட்டிகள். கறுப்பு, பிரவுன், வெள்ளை என்று எல்லா காம்பினேஷனிலும்.

மொத்தம் ஐந்து. மழையில் ‘ஙீ’ என்று குரல் கொடுத்துக் கொண்டு தடதடவென இறங்கிப் போகும் எங்களைப் பார்த்து மிரண்டு போயிருந்தன.

காலை ஒன்பது மணி மீட்டிங்.. கைவசம் பெண்டிங் வேலைகள் என்னை உள்ளே மானசீகக் கயிறு போட்டு இழுக்க போய் விட்டேன்.

பத்தரை மணிக்கு ஸ்ரீதர் ‘இளநி’ குடிக்க வரியா என்று ஆசை காட்ட வெளியே வந்தோம்.

மழை விட்டிருந்தது. இளநீர்க்கார பெண்மணி எப்போதும் போல நிறைய நீர் வைத்திருந்த இளநியை தேடிப் பிடித்து ஸ்ரீதரிடம் கொடுத்து விட்டு எனக்கு ஒரே உறிஞ்சலில் காலியாகும் அரை சொட்டு தேங்காயைக் கொடுத்தார்.

“இன்னொன்னு சாப்பிடலாமா” என்று அவன் உற்சாகமாய் கேட்க நான் நாலு பேருக்கு தொகையல் அரைக்கும் அளவுக்கு கை நிறைய கிடைத்த தேங்காயை பசக் பசக்கென்று மென்று கொண்டிருந்தேன்.

அப்போதுதான் ஒரு நாய்க் குட்டி ஓடிவந்தது. தேங்காய் சாப்பிடுமா என்கிற சந்தேகத்துடன் நான் பார்க்க.. இள்நீர் சொன்னார்.

“டீதான் தர முடியுது.. யாரோ கொண்டு வந்து இங்கே விட்டுட்டு போயிட்டாங்க”

அட.. ஆமாம்ல. குட்டிக்கு எப்படி தேங்காய் தர முடியும்..

“அஞ்சு குட்டிங்க”

இளநீருக்கு பணம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டோம். மறுநாள் மூன்று குட்டிகள் கண்ணில் பட்டன.

“நேத்தே ஒண்ணு செத்துப் போச்சு.. குளிர்ல விரைச்சு. இன்னிக்கு காலைல ஒண்ணு” என்றார் இள்நீர்.

ஹா. மனசுக்குள் ஒரு மளுக் கேட்டது.

அடுத்த இரு நாட்களில் ஒரே ஒரு கறுப்பு நாய்க்குட்டி மட்டும் மிச்சம். தனியே அது எங்கள் பாதையைத் தவிர்த்து இடைவெளிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

யார் பெற்ற குட்டிகளோ.. அம்மா என்ன ஆனாளோ.. கூடப் பிறந்தவர்களும் போயாச்சு. இன்று அது தனி மரம்.

வாழ்க்கை அதன் மேல் அழுத்தமாய் எழுதப்பட்டிருக்கிறது.

இலக்கின்றி அதன் விட்டேத்தியான நடையைப் பார்த்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம்.

சில நேரங்களில் சுலபமாய் மூடு அவுட் ஆகமுடிகிறது எனக்கும்.




November 25, 2011

தோழர் ராகவன்


அப்பா ஓய்வு பெறப் போகிறார் என்பது எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் ம்னதில் இறங்கியது.

அம்மாவிடம் லேசான நடுக்கம் தெரிந்தது.

நாங்கள் (நான், ஒரு தம்பி, இரு தங்கைகள்) படிப்பு செலவு.. மளிகை, வாடகை, பால், காய்கறி..துணிமணி..

அப்பாவின் சம்பளத்தை இதுவரை யாரும் முழுசாக பார்த்ததில்லை. வாங்கிய கடனுக்குப் பிடித்தம் போக கையில் வருவது வெகு அல்பம்.

குனிந்த தலை நிமிராமல் போய் வரும் அப்பாவுக்கு அத்தனை சாமர்த்தியம் இல்லை.

‘என்ன பண்ணப் போறேனோ.. ‘

அம்மா உபரியாய் தாயார் சன்னிதியை சுற்றி விட்டு வந்தாள். சக்கரத்தாழவாருக்கு எள் முடிச்சு விளக்கு ஏற்றினாள். காட்டழகிய சிங்கரிடம் முறையிட்டாள். கடைசியாய் எப்ப்வம் கடன் கொடுக்கும் குட்டி ஸ்வாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்தாள்.

சாத்தாரவீதியில் குண்டானை அடகு வைத்து வாங்கிய தொகை க்ஷண நேரத்தில் காணாமல் போனது.

அன்றிரவு சமையல் முடிந்ததும் அப்பா அம்மா பேசியதைக் கேட்டேன்.

“ரிடையர் ஆகற அன்னிக்கு வரவங்களுக்கு ஏதாச்சும் சாப்பிடப் போடணும்”

இது அப்பாவின் தழைந்த குரல்.

“அப்படியா.. வெறும் காபி போதாதா”

“இல்லடி.. ஆபிஸ்ல இருந்து கொண்டு வந்து விடுவா.. வெறும அனுப்பினா நல்லா இருக்காது”

“சரி.. “

“கதம்பம்.. தயிர் சாதம் அக்கார அடிசில் “ மெனுவையும் சொல்லி விட்டார்.

அம்மாவுக்குள் பீதி சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருந்தது கண்களில் தெரிந்தது.

அம்மாவின் அடுத்த பதிலை எதிர்பார்க்காமல் அப்பா கெட்டி ஜமக்காளத்தினுள் சுருண்டு மறைந்து விட்டார்.

சாயங்காலம் என்னையும் ஆபிசுக்கு வரச் சொல்லி இருந்தார். பட்டா கொடுத்த கேமிரா என் கையில்

இருக்கையில் அமர்ந்த கோலம்.. சகாக்களுடன்.. அப்புறம் பிரிவு உபசார விழாவில்.

வழக்கத்தை விடவும் இன்னும் குறுகி அமர்ந்திருந்தார். எப்போதும் போல பாராட்டுகள். சால்வை. மாலை.

“இவர்ட்ட நாம கத்துக்க வேண்டிய ஒரு நல்ல விஷயம் இருக்கு.. யூனியன் எப்ப போராட்டம் அறிவிச்சாலும் தவறாம கடைசி வரை கலந்துகிட்ட நல்ல குணம்..”

இடைவெளி விட்டு.. “தோழர் ராகவன்”

“வாழ்க” பல குரல்கள் ஒலித்தன.

அப்பாவுக்கு மட்டும் அல்ல எனக்குள்ளும் ஏதோ அதிர்ந்தது.

கீழ அடையவளைந்தான் தெரு போஸ்ட் ஆபிசில் இருந்து ஊர்வலமாய்க் கிளம்பி “தோழர் ராகவன் “ “வாழ்க” என்று கீழச்சித்திரைவீதி வரை வந்தார்கள். நூறு பேருக்குக் குறையாது.

அம்மா என்ன செய்தாளோ.. எப்படி சமாளித்தாளோ.. அத்தனை பேரும் சாப்பிட்டு வாசல் திண்ணையில் வைத்திருந்த நாலைந்து கவுளி வெற்றிலையும் காலியாகி..

இரண்டு கூடை நிறைய எச்சில் இலைகள். காபி கப்புகள்.

ஆறு சால்வைகளை அம்மா மடித்து வைத்தாள் அப்புறம். தோழர் கண் கலங்கி இன்னமும் மைக் ஒலியிலிருந்து மீளாமல் திண்ணையில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

தற்செயலாய் அம்மாவின் கழுத்தைப் பார்த்தேன். கட்டக் கடைசியாய் இருந்த இரண்டு பவுன் செயின் காணாமல் போயிருந்தது. உள்ளே பூட்டப்படாத பெட்டியினுள் சாக்லேட் டப்பாவில் அடகுக் கடை ரசீது அப்புறம் பார்க்க நேரிட்டது.

“அம்மா”

“என்னடா”

பசங்கள் நாலு பேரும் சுற்றி நின்றோம்.

“தோழி லட்சுமி”

“வாழ்க”

அம்மாவின் அந்தச் சிரிப்புக்கு எந்த நகைக் கடையை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். தப்பே இல்லை!











November 24, 2011

இப்படியும்..

”துலா ஸ்நானம் ரொம்ப நல்லது.. “

ராஜகோபுரம் வழியே நடத்தியே அழைத்துக் கொண்டு போனார் ராஜப்பா.

கூடவே பிருந்தா, அவள் மகள் ராஜ்யஸ்ரீ, மகன் ராஜேஷ்.

“தாத்தா இப்பவும் ஸ்பீடா நடக்கிறார்”

“அப்பல்லாம் தாத்தா வெளியே கிளம்பினா நானும் பாட்டியும் அரை கிமீ தள்ளி நடந்து வருவோம். அவ்வளவு ஸ்பீடு.. “ பிருந்தா சிரித்தாள்.

“இது திருமஞ்சன வாய்க்கால்.. அந்த காலத்துல இங்கேர்ந்தே பெருமாளுக்கு அபிஷேகத்துக்கு தீர்த்தம் கொண்டு போவாங்க. அவ்வளவு சுத்தமா இருக்கும். இப்ப பாரு”

கூவத்துக்கு நிகராய் ஒரு சாக்கடையைக் காட்டினார்.

“நீங்க ஸ்ரீரஙகம் வந்து ரொம்ப நாளாச்சுல்லப்பா”

பிருந்தா கேட்டாள்.

“ம்ம்.”

“ஏம்பா. உங்களுக்கு மறுபடி வரத் தோணல”

”உங்கம்மா போனதும் எனக்கு இங்கே இருக்க மனசில்லம்மா”

“ஆனா அம்மாக்கு இந்த ஊர்தான் ரொம்பப் பிடிக்கும்பா”

“ம்ம்”

“அம்மாவோட ரிலேஷன் யாரும் இங்கே இல்லியா இப்போ”

“இருப்பாங்க.. எனக்குத்தான் இப்ப யாரோடவும் டச் இல்லியே”

“எப்படிப்பா.. இப்படி சட்டுனு உதறிட்டீங்க”

பிருந்தா ஆச்சர்யமாய் பார்த்தாள்.

ராஜப்பா பதில் பேசவில்லை. ஸ்ரீரங்கம் பற்றி பேச்செடுத்தாலே மௌனமாகி விடுகிறார்.

அவர் மனசில் ஏதோ சொல்ல முடியாத ரகசியம் இருக்கிறதா..

பிருந்தாவுக்குள் குழப்பம்.

அம்மாமண்டபம் வரை நடந்தே வந்து விட்டார்கள். தெருவில் தான் எத்த்னை டிராபிக் நெரிசல். ‘பார்த்து.. பார்த்து’ என்று பதற வேண்டியிருந்தது.

திருடர்கள் ஜாக்கிரதை என்கிற பெரிய போர்டு . ராஜேஷ் படித்துக் காட்டி ‘சரியா அம்மா’ என்றான்.

” ஹை. தமிழ் நல்லா படிக்கிற.. “ என்று ராஜ்யஸ்ரீ கேலி செய்தாள்.

”ஆடி பதினெட்டுக்கு ரெங்கநாதர் இங்கே வருவார்”

"இப்படியே குளிங்கோ.. ரொம்ப போக வேணாம்”

“குளிர்றது தாத்தா”

சொன்னாலும் இருவரும் காவிரியில் இறங்கி குளிப்பதில் கும்மாளம் போட்டனர்.
பிருந்தாவும் குளித்து விட்டு வந்தாள்.

ராஜப்பா குளித்து விட்டு மேலே வரும் போது ஒரு பெரியவர் கொஞ்சம் தடுமாறி கீழே வழுக்கி விழப் போனார்.

“பார்த்து.. “

ராஜப்பா அவரைப் பிடித்து நிறுத்திவிட்டார்.

அப்புறம்தான் அவரை யாரென்று பார்த்தார்.

“நீயா”

“ராஜப்பாவா”

சட்டென்று கையை உதறினார்.

“வா பிருந்தா.. பசங்களா வாங்கோ.. சீக்கிரம்”

“ராஜப்பா.. நில்லுடா .. என்னை மன்னிச்சேன்னு சொல்லுடா”

அந்தப் பெரியவர் பின்னாலேயே ஓடிவந்தார். பிருந்தா சங்கடப்பட்டாள்.

“அவனை நிற்கச் சொல்லும்மா”

ராஜப்பா வேகமாக நடக்க பின்னாலேயே குழந்தைகளும் ஓடின.

“மன்னிச்சுக்குங்கோ.. அவர் ஏதோ வருத்ததுல போறார்..”

“ஆமாம்மா.. உங்க அம்மாவை பெண் பார்த்து வேண்டாம்னு சொன்ன பாவி நான். அது மட்டுமில்ல.. எங்க வீட்டுல அவளைப் பத்தி மட்டமா இவளுக்கெல்லாம் கல்யாணமே நடக்காதுன்னு பேசிட்டாஙக.. அப்புறம் உங்கப்பா அவளைபெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டார்.. ஒரு நாள் கோவில்ல என்னைப் பார்த்து அவ முகம் மாறினதைப் பார்த்து ராஜப்பா விசாரிச்சுருக்கான். அப்பதான் அவனுக்கு என்னைப் பத்திச் சொல்லி அழுதுருக்கா. “

பிருந்தா நம்ப முடியாத அதிர்ச்சியில் அவரைப் பார்த்தாள்.

“சொன்னா வேடிக்கையாத்தாம்மா இருக்கும். ஆனா நெஜம்மா. அன்னிக்கு அவனுக்கு என்னைப் பிடிக்காம போச்சு.. அவ மனசை ரணம் பண்னவன்னு என் மேல கோபம்.. அதுக்கப்புறம் உங்கப்பா அம்மா நல்லாத்தான் வாழ்ந்தாங்க. எத்தனை வருஷம் ஆனாலும் என் மேல உள்ள கோபம் அவனுக்கு போகல்ன்னு புரியுது.. “

பிருந்தா அவரைப் பரிதாப உணர்ச்சி மேலிடப் பார்த்தாள்.

“ வரேம்மா.. அவன் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு”

வீட்டுக்குள் வந்ததும் அப்பாவிடம் பிருந்தா கேட்டாள்.

“அவர் தப்பே பண்ணியிருக்கட்டும்.. ஆனா அவர் வேண்டாம்னு சொன்னதால தானே எங்கம்மா உங்களுக்குக் கிடைச்சாங்க.. அதுக்காவாவது அவர் மேல உள்ள கோபத்தை விட்டுரலாமேப்பா”

ராஜப்பா பதில் பேசவில்லை.


(இந்த நிகழ்ச்சியை ஒருவர் குமுறலோடு சொன்னதை கதையாக்கி விட்டேன்.. வாழ்க்கை என்பது எத்தனை வேடிக்கை காட்டுகிறது..)



November 23, 2011

மாற்றம்





’என்னப்பா.. ஏன் டல்லா இருக்கே’

‘.....’

‘ப்ச்.. சொல்லுப்பா.. நீ ஆசைப்பட்ட மாதிரி சென்னைல வேலை அப்புறம் என்ன’

‘உன்னை விட்டு போகணுமே’

ஆனந்த் சிரித்தான்.

‘ஏம்பா.. நீதான் அவ்வளவு ஆசையா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணே.. இந்த வேலைல சேர உனக்கு அவ்வளவு இண்ட்ரெஸ்ட்.. இப்ப கிடைச்சதும் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிற’

‘கிடைக்காதுன்னு நினைச்சேன்..’

‘அட.. லூசு’

‘உண்மையா.. இப்ப உன்னை விட்டு போகணுமே’

‘சென்னை என்ன வெளிநாடா.. நைட் பஸ் ஏறினா மார்னிங் உன் முன்னால’

‘உனக்கு கஷ்டமா இல்லியா’

‘ம்ம்’

ஆனந்த் யோசித்தான். இப்பதான் மெல்ல மெல்ல அரும்பிய காதல். ஆனால் வித்யா ஆசைப்பட்ட மாதிரி வேலை.

கொஞ்ச நாளாச்சும் நான் வேலைக்கு போகணும். என் இஷ்டத்துக்கு இருக்கணும்.

சொல்லிக் கொண்டே இருப்பாள்.

இப்போது கிடைத்ததும் அப்செட்! ஆனந்தை விட்டு பிரிய வேண்டுமே என்று.

‘போப்பா.. அப்புறம் பிடிக்கலேன்னா விட்டுட்டு வந்திரலாம்’

போன முதல் வாரமே வீக் எண்டில் வந்து விட்டாள். சனி ஞாயிறு பொழுது ஓடியதே தெரியவில்லை.

அடுத்த வாரம் அவன் போனான். பீச்சில் அமர்ந்து இருட்டும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

தினமும் போன். காலை வணக்கம் சொல்வதிலிருந்து அவ்வப்போது மெசேஜ்.

‘மதியம் சாப்பாடு எங்க சாப்பிடுற..’

‘எங்க ஆபீஸ் கேண்டீன்ல..’

‘நல்லா இருக்குமா’

‘சூப்பரா இருக்குப்பா’

‘ப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்களாப்பா’

‘எனக்கு யார்கிட்டேயும் பேசப் பிடிக்கலப்பா’

‘ஏய் .. அப்புறம் உனக்குத்தான் ரொம்ப போர் அடிக்கும்’

‘சாப்பிட போகும் போது உமான்னு ஒருத்தி கூட வருவா’

‘ஓ..’

இரண்டு மாசம் ஓடியது.

‘இந்த ஸாடர்டே வரலப்பா.. ஆபீஸ் வரச் சொல்லிட்டாங்க’

’ஓக்கே..’

இன்னொரு மாசம்..

இப்போதெல்லாம் ஆபீஸ் பற்றி அலுப்பு தெரிவதில்லை அவள் பேச்சில்.

‘வொர்க் பிடிச்சுப் போச்சாப்பா’

‘ம்.. நல்லா இருக்கு’

‘ரொம்ப ஓவர் லோடா’

‘சேச்சே.. அதெல்லாம் இல்ல.. எனக்கு கொஞ்சம் அதிகமா இருந்தாக் கூட தியாகுவும் வின்செண்ட்டும் ஹெல்ப் பண்றாங்க..’

‘யாரு..’

‘ஆபீஸ்லயே இவங்க ரெண்டு பேரும்தான் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க.. உமா இப்பல்லாம் என் கூட சாப்பிட வரதில்ல.. நான் தியாகு, வின்செண்ட் கூட சாப்பிட போயிருவேன்பா.’

‘ம்ம்.. இந்த வீக் எண்ட் வரட்டுமாப்பா’

‘இல்லப்பா.. சனிக்கிழமை ஆபீஸ் போனாலும் போவேன்.. ‘

‘ஓ.. எல்லாரும் வராங்களா’

‘சேச்சே.. தியாகு மட்டும் வருவார்.. ‘

‘ஓ..’

‘ஒக்கே.. நான் அப்புறம் பேசறேன்.. ஏதோ கால் வருது..’

அன்றிரவு அவன் அனுப்பிய குட் நைட் மெசெஜுக்கு இரவு பனிரண்டு மணி வரை விழித்திருந்தும் பதில் வரவில்லை.







November 22, 2011

க.மு., க.பி.


புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்களுடன் செக்க்ஷன் அதிகாரி பேசிக் கொண்டிருந்தார்.

வந்தவர்களின் பெயர், படிப்பு, ஆர்வம் எல்லாம் விசாரித்தபின் 'உங்களுக்கு எதுவும் கேட்கணுமா' என்றார்.

ஒரு கை உயர்ந்தது.

என்ன கேட்கப் போகிறானோ என்கிற ஆர்வம். 'ம். கேளு'

"கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவு கொடுப்பீங்க"

ஒரு பேட்ச்சாய் வேலைக்கு வருகிறவர்களில் ஒவ்வொருவராய் கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்ததும் மிச்சம் இருக்கிறவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

'என்னப்பா.. இன்னும் உங்க வீட்டுல பார்க்க ஆரம்பிக்கலியா' என்று கேள்வி கேட்டே வெறுப்பேற்றி விடுவார்கள்.

இன்னும் மாட்டாம சுத்திகிட்டு இருக்கான்பா ஜாலியா என்று நக்கல் அடித்தாலும் கல்யாணம் என்றால் தலையை சுற்றி ஒரு ஒளிவட்டம்.. கால்கள் தரையில் பாவாமல் மிதக்கிற அனுபவம் எல்லாம் வந்து விடுகிறது.

அதிலும் லவ் மேட்டர் என்றால் கேட்கவே வேண்டாம்.. மந்திரிச்சு விட்ட கோழி தான் (அப்படின்னா என்னன்னு தெரியாம யூஸ் பண்ணிட்டேன்..கோழிக்கு எதுக்கு மந்திரிக்கணும்)

எங்கள் அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடமாய் (அதாவது எனக்குத் தெரிந்தபின் 2 வருடம்.. அதற்கு முன் எப்போதோ) ஒன்றாய் கேண்டீனில் சாப்பிட வந்து திரும்பிப் போகிற ஜோடி ஒன்று உண்டு.

இரு வீட்டிலும் இன்னும் சம்மதம் தரவில்லை. இவர்களும் பொறுமையாய் காத்திருக்கிறார்கள்.

பெண்ணின் தலைமுடி ஒன்றிரண்டு வெளுக்கவே ஆரம்பித்து விட்டது.

இருவரும் வெவ்வேறு பகுதியில் பணி. ஒரு பாயிண்ட்டில் சந்தித்து, கேண்டீனில் ஒன்றாய் சாப்பிட்டு பின் அவளிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு போவான்.

மானசீகமாய் நான் 'சீக்ரமேவ விவாஹ ப்ராப்தி ரஸ்து' சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு ஜோடி காதல் திருமணம்தான். அதற்கு முன்பு வரை இயல்பாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவன் இப்போது அவளைத் தவிர வேறு யாரிடமும் பேச மறுக்கிறான்.

''என்னடா பண்ணா அவ.. பய மந்திரிச்சு விட்டா மாதிரி அவ பின்னாலேயே போறான்'

ம்ஹூம். அவன் பேசவே தயாராய் இல்லை. குனிந்த தலை நிமிராமல் எங்களை கடந்து போய் விடுவான்.

கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவு தருவீங்கன்னு கேட்டவன் இன்று வந்து ஸ்வீட் கொடுத்தான். மேரேஜ் பிக்ஸ் ஆயிருச்சாம். எப்ப லீவுல போகப் போறேன்னு கேட்டதும் அப்படி ஒரு வெட்கம் முகத்தில். (ஆமா.. இப்பல்லாம் பசங்கதான் ரொம்ப வெட்கப் படறாங்க போல)

கல்யாணம் ஆனவங்களை கேட்டா அது வேஸ்ட்னு டென்ஷன் ஆவுறாங்க.

என் ப்ரெண்ட் மதியம் கேரியர் பிரிச்ச உடனே மூஞ்சி போகற போக்கே சகிக்காது.. செம வெறுப்பா சாப்பிட ஆரம்பிப்பார்.

ஒரு நாள் வாங்கி டேஸ்ட் பார்த்தேன். நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா என்ன அனுப்பினாலும் அவர் மூஞ்சி சுளிப்பாரு.

ம்ம்.. இதோ இன்னொரு ப்ரெண்ட் வரான்.. பிக்ஸ் ஆயிருச்சாம்.. மொபைல்ல போட்டோ காட்டறான்.. அதுக்குள்ள கால் வருது.. ஜன்னலுக்கு வெளியே தலைய நீட்டி ஏதோ கீழே குதிக்கப் போறவன் மாதிரி டவர் கிடைக்காம பேசுறான்.. இனிமே இவனும் ஒழுங்கா பேச மாட்டான் .. மெசெஜ்.. கால்னு திசை மாறிடுவான்..

க.மு., க.பி.ன்னு அதாவது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று இரு முகங்களா.. இவர்களுக்கு?

புது பேட்ச்ல ஏதாச்சும் ப்ரெண்ட் கிடைக்குதான்னு பார்க்கணும்..


November 21, 2011

கல்யாண சாப்பாடு




இன்று விருதுநகர் வரை போக வேண்டியிருந்தது.

அலுவலக நணபருக்கு கல்யாணம்.

நாங்கள் 5 பேர் ஒரு அம்பாசிடர் காரில் போனோம். காலை 6 மணிக்குக் கிளம்பி நடுவில் ஒரு இடத்தில் டிபன் சாப்பிட நிறுத்திவிட்டு 9.30க்கு போய்ச் சேர்ந்து விட்டோம்.

மணமகள் வீட்டார் தனி மண்டபம். அங்குதான் திருமணம். மணமகன் வீட்டார் இன்னொரு மண்டபம். 5 நிமிட நடை தூரம்.

திருமணம் முடிந்ததும் மொய் கொடுக்க மேடை ஏறினால்.. ‘மணமகன் அங்கே வருவார்ங்க.. அங்கே கொடுங்க’ என்றார்கள்.

சாப்பாடும் எங்களுக்கு அங்கேதானாம்!

எனக்கு இது புது அனுபவம். இரு வீட்டார் இணையும் நிகழ்ச்சியில் சாப்பாடு தனித்தனியாகவா..

கூட வந்த இன்னொரு நண்பர் விளக்கம் தந்தார். சில பிரிவுகளில் இப்படித்தானாம்.

மறக்காமல் எங்கள் ஓட்டுநரையும் சாப்பிட அழைத்தோம். ‘இல்லை.. நீங்க போயிட்டு வாங்க’ என்று மறுத்து விட்டார்.

நண்பர் சொன்னார். ‘பொதுவா டிரைவர்கள் எல்லாம் சாப்பிட மாட்டாங்க.. ஓட்டும்போது தூக்கம் வரும்னு’

நாங்கள் மட்டும் போய் வாழ்த்திவிட்டு, உணவருந்தி விட்டு திரும்பினோம்.

திருச்சி திரும்பியதும் கடைசியில் இறங்கியது நான் தான். மற்றவர்களை அவரவர் இடங்களில் இறக்கி விட்டபிறகு.

‘அடடா.. நீங்க சாப்பிடவே இல்லியே.. பணம் கொடுத்து வெளியே சாப்பிடுங்கன்னு சொன்னா அதையும் கேடகல..’ என்று என் வருத்தம் சொன்னேன்.

அப்போது அவர் சொன்னார்.

“இதுக்கு முன்னால ரொம்ப அவமானப்பட்டிருக்கேன்.. சவாரி வரவங்க சாப்பிட் கூப்பிடுவாங்க.. போனா கல்யாண வீட்டுல யாராச்சும் தடுத்து திருப்பி அனுப்பிருவாஙக."

"அது சரி.. ஆனா இப்ப நாங்கதான கூப்பிட்டோம்.. அதுவும் எங்க கூடவே சாப்பிட அழைச்சுகிட்டு போகறதால்ல இருந்தோம்..”

மென்மையாக மறுத்தார்.

“இல்லிங்க.. நாலஞ்சு தடவை இப்படி அவமானப்பட்டுட்டேன்.. அதனால இப்பல்லாம் கல்யாண வீட்டுல சாப்பிடறதே இல்ல.. இதே போல ஒரு டாக்டர் கூட காரோட்டிகிட்டு போனேன்.. அவர் போன் பண்ணி வரச் சொன்னார்.. படியேறி போனபோது ஒருத்தர் போ.. போன்னு விரட்டிட்டார்.. டாக்டர் ஏன் வரலன்னு மறுபடி போன் பண்ணார்.. விவரத்தைச் சொன்னேன்.. உன்னை யார் விரட்டினதுன்னு கேட்டார்.. சரியா அடையாளம் தெரியலன்னு சொன்னதும் அவரும் சாப்பிடாம என் கூட வந்துட்டார்.. வீடு வர வரை புலம்பிட்டார்.. ச்சே இப்படி பண்ணிட்டாங்களேன்னு”

“நான் அழைச்சுகிட்டு போன டிரைவர்ஸ் எல்லாம் சாப்பிட வச்சிருக்கேன்.. அதுவும் நான் எந்த கல்யாணத்துக்கு போனேனோ.. அந்த வீட்டுக்காரங்களே ஞாபகப்படுத்தி அழைச்சுகிட்டு வரச் சொல்வாங்க” என்றேன் என் அனுபவத்தை.

“இருக்க்லாம்.. ஆனா எனக்கு இப்படி ஆச்சு.. நான் சம்பாதிக்கிறேன்.. என் பணத்துல எங்க வேணா சாப்பிட்டுக்கலாமே.. ஏன் பேச்சு வாங்கணும்னு நான் வரதில்ல.. மனசு கஷ்டம் தாங்க முடியல.. ஏதாச்சும் சொல்லிட்டாங்கன்னா”

அவரிடம் நூறு ரூபாயை மறுத்தபோதும் வற்புறுத்தி கொடுத்தேன்.

காரை விட்டு இறங்கி நடந்த போது அவர் சொன்னது மனசில் நெருடிக் கொண்டிருந்தது.



November 20, 2011

பல்ப்




பிறந்த நாட்களை நினைவு வைத்து வாழ்த்துகிற நல்ல பழக்கம் என்னைத் தவிர மற்ற எல்லோரிடமும் இருக்கு...

சரியாக 12.01 க்கு என்னை அழைத்து ’இனிய பிறந்த தின நல்வாழ்த்து’ சொன்ன சிநேகத்திற்கு பதில் மரியாதை செய்ய நினைச்சேன்..

அந்த நேரம் விழித்துக் கொண்டிருக்க் வேண்டியிருக்குமே..

இருக்கவே இருக்கு.. மொபைல்.. அலார்ம் வச்சு படுத்தாச்சு..

12.01.. செல் அலறிச்சு.. பர்ஸ்ட் எனக்குதான் ஏதோ அழைப்பு வருதாக்கும்னு தூக்கக் கலக்கத்துல நினைச்சுட்டு ‘சொல்லுங்க’னேன்.. அப்புறம் புரிஞ்சிது.. அது நான் வச்ச அலார்ம் தான்னு..

முதல்ல ‘ஹேப்பி பர்த் டே’ன்னு மெசேஜ்..

அப்புறம் ஹீரோ மாதிரி நெஞ்சை நிமிர்த்திகிட்டு கால் பண்ணேன்,.

எப்படி குஷியாகப் போறாங்க எதிர் முனைல.. என் வாய்ஸ் கேட்டு.. அதுவும் சர்ப்ரைசா..

“என்னப்பா”

“ஹேப்பி பர்த் டே.. டூ யூ..”

“லூசு.. இன்னிக்கு என்ன டேட்னு பாரு..”

ஆ.. மறுநாள் தான் பர்த் டே. நான் தப்பா தேதியை செட் பண்ணி கால் பண்ணிருக்கேன்..

“பேசாம தூங்கு..”

கப்சிப்.. கட் பண்ணி படுத்தாச்சு.. காலைல வீட்டுல அத்தனை பேர்கிட்டேயும் அதை உளறிட்டு காமெடி பீஸ் ஆயிட்டேன்..

“என்ன பல்ப் வாங்கினியா’ன்னு..

‘நல்லா சொதப்பின போ” இது ப்ரெண்டோட கமெண்ட்.

சாயங்காலம் போன் பண்ணி ‘இப்ப நினைச்சா கூட சிரிப்ப அடக்க முடியல’..

என் வரலாறுல இது இனிமே கல்வெட்டா நின்னுருச்சே!




November 14, 2011

மழலை



குழந்தைப் பருவம்
இன்னமும் மனசில்
தவழ்ந்து கொண்டுதானிருக்கிறது
எல்லோருள்ளும்..

கை நீட்டி தொட்டுப் போகும்
குழந்தை
சட்டென்று
எழுப்பி விட்டுப் போகிறது
உள்ளே ஒளிந்திருந்த
மனக் குழந்தையை..

ஆண் பெண் பேதமற்று
பாச விரல்களை நீட்டி
‘வாழ்த்து’ சொல்லும்
ஒவ்வொரு முறையும்
தேவன் வருகிறார்
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
எல்லோருக்குள்ளும்..

அவ்வப்போது
தலை நீட்டும்
குழந்தையை
எப்போதும்
தொலைய விடாமல்
காப்பாற்றிக் கொள்வோம்..

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!



November 09, 2011

சிறு பிள்ளை


சிறு தூறலோ..
பெரு மழையோ..
பொழியும் போதெல்லாம்
ஆச்சர்யப்படுத்திக்
கொண்டிருக்கிறாய் நீயும்..
அந்த வானத்தைப் போலவே.
அன்பில் நனைவதைத் தவிர
வேறேதும்
செய்வதறியா
சிறு பிள்ளையாய் நான் !


ஒரு கவிதைக்கான
சாலையை
செப்பனிட்டுக் கொண்டிருக்கிறது
எண்ணம்.
இரு புறமும்
இயல்பாய் பூத்து
குலுங்கிக் கொண்டிருந்தன
முன்னாட்களில்
நடப்பட்ட செடிகள் !


November 07, 2011

விக்கிரமங்கலம்



ரொம்ப வருடம் கழிச்சு முன்பு குடியிருந்த ஊரைப் பார்க்கப் போனேன்.

அலுவலக நண்பர் அதே ஊர்க்காரர்தான். புது வீடு கட்டி புகுவிழா அழைப்பு தந்தார்.

”நிச்சயம் வரேன்”

என் பள்ளி வாழ்க்கை ஆரம்பித்தது அங்கேதான்.

அப்பா போஸ்ட் மாஸ்டர். என் ஆரம்ப காலம் - பள்ளிகள் - ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊரில்..

ஆனாலும் முதல் காதல்.. முதல் முத்தம் போல முதல் வகுப்பு விக்கிரமங்கலம்.

அரியலூர் டூ முட்டுவாஞ்சேரி ரூட்டில் நாகமங்கலம் அடுத்து விக்கிரமங்கலம்.

அப்போது போஸ்ட் ஆபீஸ் பிளஸ் வீடு.. வாசல் பக்கம் அலுவலகம்.. பின்னால் அடுத்த பகுதியில் வீடு..

இதோ.. ஆபீஸ் கம் வீடு இருக்கும் தெரு.. அம்பாப்பூர் சாலை..


தபால் பெட்டி தொங்கும் வீடு. நாங்கள் குடியிருந்த போது எப்படி இருந்ததோ.. அதில் ஒரு ஒட்டடை கூடத் தொலையாமல் அப்படியே..



அருகிலேயே ஒரு பிள்ளையார் கோவில். அவரும் அதே பழைய வீட்டில்.





போஸ்ட் ஆபீஸ் கவுண்டர் கூட அதே..



ஆனால் அலுவலகம் உள்ளே.. கணினிகள்!




இதோ இன்னொரு மேஜையிலும்..



அப்பா ஓய்வு பெற்றபின் இப்போதுதான் அங்கே போகிறார். எதிர் வீடு, பக்கத்து வீடு, தெரு.. என்று அந்த நாள் மனிதர்களின் பெயர்கள், உறவுமுறை எல்லாம் சொல்லி விசாரிக்க, விசாரிக்க அவர்களுக்கு என்ன ஒரு உற்சாகம்.

‘இந்த ஊருக்கு தபால் ஆபீஸ் வந்ததும் முதல் போஸ்ட் மாஸ்டர்..’ என்று இந்தத் தலைமுறை மனிதருக்கு அப்பாவையும் , அவர் மகன் என்று என்னையும் அறிமுகப்படுத்தினார்கள்.

என்னோடு முதல் வகுப்பு படித்த பலரில் எனக்கு நினைவில் இருக்கிற ஒரே தோழன் ராமலிங்கத்தைப் பார்த்தேன்.

‘நீ ராமலிங்கம் தானே..’

‘நீ கண்ணன் தானே’

ஆயிரம் சொல்லுங்கள்.. அபிஷியல் பெயர் சொல்லி அழைக்கும் மனிதரின் மத்தியில் வீட்டுப் பெயர் சொல்லி, இறுக்கக் கட்டிக் கொள்ளும் தோழமை தருகிற
ஆனந்தமே தனிதான்.

சுற்றி நின்றவர்களிடம் ராமலிங்கம் முகமெல்லாம் பூரிப்பாய் சொல்லிக் கொண்டிருந்தான் (ர்).

‘பாருங்க.. இவர் யாருன்னு மத்தவங்களைப் பத்தி கேட்டதுக்கு மத்தியில.. நாங்க ரெண்டு பேரும் பார்த்த உடனே புரிஞ்சுகிட்டோம்.”

இந்த பக்ரீத் மறக்க முடியாத நாளாகிவிட்டது எனக்கும்!





November 03, 2011

குறுஞ்செய்தி





எனக்கு வந்த சில குறுஞ்செய்திகள் : -

உன் கோபத்தை விலை உயர்ந்ததாக ஆக்கு..
யாராலும் விலைக்கு வாங்க முடியாத படி!
உன் மகிழ்ச்சியை எளிய விலையில் வை..
எல்லோரும் உன்னிடம் இலவசமாகப் பெறும் அளவுக்கு.


உங்கள் துக்கங்களுக்கு சந்தையில் இடம் இல்லை..
அதனால் சோகங்களை எப்போதும் விளம்பரம் செய்யாதீர்கள்!
- சார்லி சாப்ளின்

பேசுவதை விட குறுஞ்செய்தி மேலானது.
ஏனென்றால் பேச்சு உதட்டிலிருந்து..
செய்தியோ இதயத்திலிருந்து!

நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா சிரித்த ஒரே நாள்
உன் பிறந்த நாள்!


வயதானதால் தான் எல்லோரும் சிரிப்பதில்லை என்று அர்த்தமில்லை..
உண்மை என்னவென்றால் சிரிப்பை மறந்ததால் தான் வயதான தோற்றமே!

நண்பன் அவசியமா..
நட்பு இல்லாத வாழ்வை நினைத்துப் பாருங்கள்.
ப்ள்ளியில்..
வைபவங்களில்..
பிறந்த நாள் அன்று..
வருத்தம் வரும் போது..
சிரிப்பைப் பகிர..
சீண்ட..
பிரிந்தால் கலங்க..
சேர்ந்தால் கவனிக்க..
இதை உங்கள் முட்டாள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்..
அவர்கள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றுப் போகிறது என்பதைச் சொல்ல..

இதோ நான் உனக்கு அனுப்பியதைப் போல!