November 09, 2013

எப்பவாச்சும் ஒரு ரவுண்ட்




உலகத்திலேயே ரொம்ப சுவாரசியமான இடம் எது தெரியுமா.. பீச்.. அதாங்க கடற்கரை. பலதரப்பட்ட மனிதர்கள் வந்து போகிற இடம். எதிரே கடல். அலைகள் வந்து கரையைத் தொட்டுப் போகும். என் நண்பன் நாகராஜ் ஒரு கவிதை அனுப்பியிருந்தான். கடலே நீ எத்தனை முறை அலையாக வந்து என் காலில் வந்து விழுந்தாலும் உன்னை மன்னிக்க மாட்டேன். தலைப்பு என்ன தெரியுமா.. சுனாமியில் பெற்றவரை இழந்த மகன்.
கடல் இல்லாத ஊர்களில் சுவாரசியத்துக்கு என் சாய்ஸ் என்ன தெரியுமா.. பஸ் ஸ்டாண்ட். வெளியூர்ல இருந்து வரவங்க.. வெளியூருக்குப் போகிறவங்கன்னு அந்த இடமே கலகலப்பா இருக்கும். எத்தனை விதமான சத்தங்கள்.. ஹாரன் ஒலியிலிருந்து மனிதர்கள் பேசுகிற சத்தம் வரை.
இங்கிருந்துதான் கிளம்புது நான் ஏறிக் கொண்ட பஸ்ஸூம். அப்பவே வந்து உட்கார்ந்தாச்சு. ஒரு ட்ரிப் அடிச்சுட்டு கொண்டு வந்து நிறுத்திட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி தேனீர் குடிக்கப் போயிட்டாங்க.
முதல் ஆளா நான் மட்டும் வந்தேன். வெளியே கூட கொஞ்சம் காற்று வீசுது. அது ஏன்னு புரியல. பஸ்ஸுக்குள்ள வெப்ப அலை அடிக்குது. எப்படித்தான் ஓட்டுனரும் நடத்துனரும் காக்கி உடையோட பொறுமையா பஸ்ஸுக்குள்ள இருக்காங்களோ..
எனக்குப் பிறகு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. நான் ஜன்னல் பக்கம் உட்கார்ந்து இருந்தேன். என்னைத் தவிர்த்துட்டு காலியா இருக்கற மத்த சீட்டுல உட்கார்ந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா பஸ் ஃபுல் ஆக ஆரம்பிச்சது. கணவன் மனைவி ஜோடியா வந்தாங்க. சுத்திமுத்தி பார்த்துட்டு அப்புறம் எங்கிட்டே வந்தாங்க. பின் சீட்டுல ஒரு இருக்கை காலியா இருக்கு.. நீங்க அங்கே போறீங்களான்னு கேட்டாரு. எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல. அது ஏங்க குறி பார்த்து நம்மளையே எல்லோரும் தேடி வராங்க.. சீட் மாத்திக்க.
ரெயில்ல போனாலும் இப்படித்தான். லோயர் பர்த்ல இருப்பேன். தம்பி வயசானவன் நானு.. அப்பர் பர்த் கொடுத்துட்டாங்க நீங்க மேல படுக்கறீங்களாம்பாங்க. முடியாதுன்னு சொன்னா விரோதி போல பார்ப்பாங்க. இப்பவும் அதே போலத்தான் எனக்கு விருப்பம் இல்ல.. ஜன்னல் சீட்டை விடறதுக்கு வேடிக்கை பார்க்கத்தான் காலியா இருக்கற பஸ்ஸுல ஏறினேன். அதுவும் ரெண்டு பஸ்ஸை விட்டுட்டு. ஏதோ அவரோட சொத்தைக் கொள்ளையடிச்ச மாதிரி என்னை முறைச்சுட்டு பின்னால போனாங்க.
டிரைவர் இன்னும் வரல. கண்டக்டர் மட்டும் வந்தாச்சு. நாம் கொடுக்கற ரூபா நோட்டுக்களை குறுக்கால மடிச்சு அவரோட விரலிடுக்குல சொருகிக்கிற அழகை ரசிச்சுகிட்டே வெளியேயும் வேடிக்கை பார்த்தேன். கூட்டம் இப்போ அதிகமாக ஆரம்பிச்சது.

"உள்ளே நகருங்க சார்.. ஏறினவங்க எல்லாரும் படியிலேயே நின்னுகிட்டா மத்தவங்க எப்படி ஏர்றது"
நடத்துனரின் குரலில் தெரிந்த கோபம் யாரையும் பாதித்த மாதிரி தெரியவில்லை. அவரவர் நின்ற இடத்திலேயே லேசாக அசைந்து கொடுத்துக் கொண்டார்கள்.
"டிக்கட்.. டிக்கட்"
"சில்லறையாக் கொடுங்க.. எல்லாரும் பத்து ரூபாயை நீட்டினா?"
எனக்கு கடைசி ஸ்டாப். ஆறு ரூபாய் சில்லறையாய்க் கொடுத்து டிக்கட் வாங்கினேன். நடத்துனரிடம் அதற்காக சர்டிபிகேட் கிடைக்கவில்லை. ஒரு புன்முறுவல் கூட கிடையாது.
பத்துரூபாய் கொடுத்தவர் டிக்கட் வாங்கிக் கொண்டு மீதிக்கு கை நீட்டினார்.
"ஒரு ரூபாய் கொடுத்துட்டு அஞ்சு ரூபாய் வாங்கிக்குங்க"
"சில்லறை இல்ல"
"அப்ப வெயிட் பண்ணுங்க.. சேஞ்ஜ் வந்தா தரேன்"
நடத்துனர் முன்னால் போய் விட்டார்.
சினிமா பாட்டு அலறியது. அது ஏன் எல்லாப் பேருந்துகளிலும் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் மனதைக் கெடுக்கும் வார்த்தைகளோடு டப்பாங்குத்து இசையில் பாட்டைப் போடுகிறார்களோ.
என் அருகில் அமர்ந்திருந்தவன் கையால் தாளம் போட்டுக் கொண்டு வந்தான். முன் சீட்டுக் காரருக்கு கைபேசியில் அழைப்பு வர ஹலோ ஹலோ என்று அலறினார்.
"பஸ்ல வந்துகிட்டிருக்கேன்.. இறங்கிட்டு பேசவா"
செல்லை அணைத்துவிட்டு முனகினார்.
"பேச்சே கேட்கலே.. என்ன சொல்ல வந்தானோ.."
என்னைத் திரும்பிப் பார்த்தார்.
என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க.. சத்தமா பாட்டு வைக்கிறாங்க”
என்றார்.
ம்” என்று தலையசைத்தேன். அப்போது ஒலிபரப்பான பாடல் எனக்குப் பிடித்த பாடல்.
'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே'
மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு அவருக்கு உம் கொட்ட வேண்டியதாயிற்று.
அவருக்கு நடத்துனரிடம் சொல்ல என்ன தயக்கமோ.. அல்லது சொன்னால் அவர் கேட்க மாட்டார் என்கிற சந்தேகமோ.
இதற்குள் இன்னொருவர் கத்தினார்.
"டவுனுக்கு டிக்கட் கொடுங்க"
நடத்துநர் விசில் அடித்தார் எரிச்சலாய்.
"போர்டைப் பார்த்து ஏறமாட்டீங்களா.. இறங்குய்யா"
எதிர் திசையில் ஏற வேண்டியவர் இந்த பக்கம் வந்து விட்டார் என்று புரிந்தது.
அடுத்த ஸ்டாப்பில் பத்து பேர் ஒரே குடும்பமாய் ஏறினார்கள்.
"ஏய் புள்ளைய புடிடி.."
"டிக்கட்.. "
"பத்து ஜங்ஷன் கொடுங்க"
"அந்தப் பையனுக்கு எடுத்தீங்களா"
"அவனுக்கும் சேர்த்துத்தான்"
போடா போய் அந்த சீட்டுல ஒக்காரு” என்று விரட்டினார். காலியாகிற சீட்டுக்கு ஓட்டப்பந்தயம் பஸ்ஸுக்குள்ளேயே நடந்தது.
முன்சீட்டு செல்காரர் இறங்கிப் போக இப்போது எனக்கு முன் சீட்டில் புதிதாய் கல்யாணம் ஆன ஜோடி.
"உன் தம்பியும் கூட வந்திருவான்னு நினைச்சேன்"
"வந்தா நல்லா இருந்திருக்கும்" என்றாள் அவள்.
"நீங்க ரெண்டு பேரும் போங்கன்னு நான் வீட்டுல இருந்திருப்பேன்.."
"அப்பவே சொல்லியிருந்தா அவனைக் கூட்டி வந்திருப்பேன்ல"
"என்ன.. விளையாடுறியா"
"யாரு விளையாடறது..நீங்களா.. நானா"
பட்பட்டென்று வார்த்தைகள். இருவரிடமும் யார் சீண்டலில் முந்துவது என்கிற போட்டி.   கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா ரெண்டு பேரும் கையை கோர்த்துகிட்டு சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க  அது என்னவோ சண்டை போட்டு சமாதானம் ஆனாத்தான் சுவாரசியமோ என்னவோ.
கைக்குழந்தையோடு ஒருத்தி வர முன் சீட்டுக்காரன் புது மனைவியை விட்டுப் பிரிய மனசில்லாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். என் அருகில் இருந்தவன் எழுந்திருக்க கைக்குழந்தைக்காரி என்னை ஒரு முறை முறைத்து விட்டு என் அருகில் அமர்ந்தாள். குழந்தை என் சட்டைப்பையை இழுத்தது.
"ஏய்.. தொடாதே.." என்று அவள் கத்தியதை லட்சியம் பண்ணவில்லை. என் சட்டைப்பை அலுத்ததும் குழந்தையின் கவனம் முன் சீட்டு பெண்ணின் கூந்தல் மேல் திரும்பியது. சூடியிருந்த பூவை இழுத்துப் பார்த்தது. அவள் கோபமாய்த் திரும்பி குழந்தைதான் என்று தெரிந்ததும் சிரித்தாள்.
என் எதிர் சீட்டில் ஒரு பெண் பஸ் ஏறிய நிமிடத்தில் இருந்து கண் கலங்கியபடியே இருந்தாள். என்ன சோகமோ. விசாரிக்க வேண்டும் போல ஒரு தவிப்பு. கவலைப்படாதே எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்ல வேண்டும் போல.. ஆனால் நிஜத்தில் அது முடியாது.
மார்க்கட் பகுதியைத் தாண்டிப் போகும் போது மிளகாய் நெடி கமறியது. நயம் உருட்டுப் பருப்பு கிடைக்கும் என்று விளம்பரம். அது என்ன உருட்டுப் பருப்பு என்று மனசுக்குள் ஒரு பிறாண்டல். பஸ் மெல்ல ஊர்ந்து அந்த இடத்தைக் கடந்து முன்பு சினிமா தியேட்டர் நிறுத்தமாய் இருந்த இடத்திற்கு வந்தது.
'அப்பல்லாம் இங்க்கே 100 நாள் ஓடும் எந்தப் படம் வந்தாலும்'
என்னருகில் நினறவரின் குரல் கேட்டது.
இப்ப தியேட்டரே இல்லை.. இடிச்சுட்டாங்க..' என்று அவரே சொல்லிக் கொண்டார்.
மேம்பாலத்தின் மீது போகும் போது காற்று வேகமாய் முகத்தில் அறைந்தது. பேக்கரியைத் தாண்டும்போது கேக் வாசனை. கைக்குழந்தைக்காரி இறங்கிப் போக நடத்துனர் என் சீட்டுக்கு அருகில் வந்து எட்டிப் பார்த்தார். அவரது கைப்பை என் முகத்தில் உரசியது.
"சீக்கிரம் இறங்குங்க.."
"இறங்கறதுக்குள்ள என்ன அவுதி.."
யாரோ ஒரு பெண்மணி கத்திக் கொண்டே போனாள். இறங்கியபின்னும் அவள் குமுறல் ஓயவில்லை. ' ஏத்தும்போது எங்க்கே வேணா நிறுத்தி ஏத்துவாங்க.. இறங்கும் போது மட்டும் பொறுமை இல்ல.. வுழுந்து வச்சா ஆசுபத்திரி செலவுக்கு இவங்களா பணம் தருவாங்க'
பஸ் தபால் அலுவலக ரௌண்டானாவைக் கடந்து ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தது.
ரெயிலுக்கு போறவங்கல்லாம் இறங்கிக்கலாம்”
பார்த்து.. பார்த்து” என்று ஒரு கரிசனக் குரல் கேட்டது.
பொட்டிய எடுத்துகிட்டியா.. வாட்டர் பாட்டில் வச்சிருந்தியே அந்தப் பை..”
சாமான் களை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கணக்குப் பார்த்தவர்கள் தடுமாறி நின்ற குழந்தையை விட்டு விட்டார்கள்.
ஏய்.. கலா எங்கேடி”
நீங்க கூட்டிட்டு வரலியா”
நல்ல வேளை. பஸ் இன்னும் கிளம்பவில்லை. கலாவின் தகப்பன் பஸ்ஸுக்குள் பாய்ந்து மிரண்டு நின்றிருந்த குழந்தைடை கூட்டிக் கொண்டு கீழிறங்கினார்.
'என்ன அவசரமோ.. பெத்த புள்ளையைக் கூட விட்டுட்டு போறாங்க' என்று ஒருவர் நக்கலடித்தார்.
பஸ் இப்போது மத்திய பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. பாதி கூட்டம் கீழிறங்க காலியான இடங்களில் நினறவர்கள் பாய்ந்து அமர்ந்தார்கள். புதிதாய் ஏறியவர்கள் சிலர் இடம் கிடைத்து அமர, மற்றவர்கள் நிற்க.. பஸ் மீண்டும் கிளம்பியது.
எனக்கு இவ்வளவு யோசனையிலும் பஸ்ஸைப் பற்றிய நினைப்பும் வந்தது.
பஸ்ஸுக்கு மட்டும் உணர்வும் பேச்சுத் திறனும் இருந்தால் என்னவெல்லாம் சொல்லி இருக்கும்.. அது ஒரு இயந்திரம் தானே பயணிப்பவர்களுக்கு. ஏறிக் கொள்வதும் பயணம் முடிந்தால் இறங்கிப் போவதுமாய் மனிதர்கள் பஸ்ஸைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர.. பஸ்ஸைப் பற்றி சிந்திக்க அவகாசம் இருக்கிறதா என்ன.
அந்த நேரம் பட்டென்ற சத்தம்.. டயர் வெடிப்பது போல..
போச்சுடா.. பிரேக் டவுனா.. டயர் அவுட்டா”
பஸ் ஓரங்கட்டி நின்றதும் உள்ளே எரிச்சலும் இரைச்சலும் அதிகமாயின.
'கலெக் ஷன் பார்க்கிறாங்களெ தவிர.. பஸ்ஸுக்கும் பராமரிப்பு பண்ணனும்ல”
இப்போது பஸ்ஸுக்கு மனசு குளிர்ந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பே எனக்கு சிரிப்பை வரவழைித்தது.
இறங்கிப் பாருங்கண்ணே' என்று நடத்துனரும் ஓட்டுனரும் ஒருவரை ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.
இதுவரை எனக்கிருந்த வேடிக்கை பார்க்கும் மன நிலை அப்போதுதான் லேசாய் ஆட்டம் கண்டது. என்ன ஆச்சு.. பஸ் போகாதா.. பிரச்னையா..
சிலர் இறங்கிப் பார்த்தார்கள். டிரைவர் டயரை தட்டிப் பார்த்தார்..
'மறுபடி எல்லோரும் ஏறிக் கொண்டார்கள்.
'என்னவாம்.. '
இப்போது பஸ்ஸுக்குள் சிரிப்பு சத்தம் கேட்டது. டயர்லாம் வெடிக்கல.. பஸ் எது மேலயோ ஏறி அந்த சத்தம்.. வாட்டர் பாட்டில் போல..
எனக்கும் பெருமூச்சு வந்தது. கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொண்டேன்.
ஒன்றேகால் மணி நேரம் பயணம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது. சோழன் நகர் பஸ் நிறுத்தம். கடைசி ஸ்டாப்.
எல்லோரும் இறங்கிப் போக ஓட்டுனர் இறங்கி சிகரட் பற்ற வைத்தார். நடத்துநர் எதிர் டீக்கடைக்குள் போனார். பஸ்ஸுக்குள் இப்போது என்னைத் தவிர வேறு எவரும் இல்லை.
நடத்துனர் மேலே வந்ததும் என்னைப் பார்த்தார்.
"என்ன இறங்கலியா"
நான் முன்பு ஏறிய பஸ் ஸ்டாப்பைச் சொல்லி மறுபடி டிக்கட் கேட்டேன்.
இந்த முறையும் சில்லறையாகக் கொடுத்தேன்.
என்னை ஒரு மாதிரி விழித்துப் பார்த்துவிட்டு டிக்கட் கிழித்து கொடுத்தார். பதினைந்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் பஸ் வந்த ரூட்டிலேயே விரைய ஆரம்பித்தது.
இப்போது வேறு மாதிரியான பயணிகள். சம்பாஷணைகள். இப்போது நடத்துனர் என்னைக் கடக்கும்போதெல்லாம் ஒரு பார்வையை வீசிவிட்டுப் போனார். அவருக்கு நான் ஒரு புதிராகத் தெரிந்திருக்க வேண்டும். என்னிடம் கேட்க முடியாமல் அவரது கடமைகள் அவரை இழுத்து விட்டன.
பஸ் இப்போது வந்த பாதையிலேயே திரும்பி ஓட ஆரம்பித்தது. முன்பு பார்த்த அதே இடங்கள்..மறுபடி மேம்பாலம்.. மிளகாய் நெடி.. கேக் வாசனை.. சில்லறை சண்டை.. ஆற்றுப்பாலம்.. ஆனால் இந்த முறை பயணித்தவர்கள் எல்லோருமே புதுசு. என்னைத் தவிர,.
ஒரு குட்டிப் பெண்ணும் அப்பாவும் ஏறினார்கள். பெண்ணை என் அருகில் உட்காரச் சொன்னார். கொஞ்சம் தயங்கி விட்டு அமர்ந்தது.
அங்கிள் இன்னிக்கு எனக்கு பர்த் டே”
சாக்லேட்டை நீட்டியது. அப்பா மகளின் பேச்சை ரசித்தார். ஒரு வினாடி தயங்கின என்னை வாங்கிக் கொள்ளச் சொன்னார்.
தேங்க்ஸ் பா.. உன் பேர் என்ன”
நிர்மலா”
நல்ல பெயர்.. என்ன படிக்கிற”
சொன்னாள்.
அடுத்த ஸ்டாப்பில் இறங்கும் போது எனக்கு டாட்டா காட்டிவிட்டு போனாள்.
சாக்லேட்டைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டேன். அடி நெஞ்சு வரை இனித்தது எதிர்பாராமல் கிட்டிய நேசம்.
ஆற்றுப்பாலத்தில் காற்று பிய்த்துக் கொண்டு போனது. நெடுந்தூரம் ஓடிய அலுப்போ என்னவோ பஸ் இப்போது ஒரு பெருமூச்சு விடுகிற பிரமை எனக்குள்.
ஏறிய இடத்திற்கே வந்து நின்றது.
கோவிலுக்கு போகிறவங்க எல்லாம் இறங்கிடுங்க்க. இதான் கடைசி ஸ்டாப்”
எல்லோரும் இறங்கினார்கள்.. என்னைத் தவிர. கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தேன். வெளியே என் பார்வை ஓடியது.
நடத்துனர் என் அருகில் வந்தார்.
"இறங்கப் போறீங்களா.. டிக்கட் போடவா" என்றார் பாதி கேலியாக.
சிரித்தேன் மனம் விட்டு. அதே நேரம் என் தம்பி பஸ்ஸுக்குள் வந்தான்.
நடத்துனர் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்.
"போலாமா" தம்பி என்னிடம் கேட்டான்.
"ம்" என்று தலையாட்டினேன்.
என்ன சந்தோஷமா” என்றான் சிரிப்புடன்.
இதற்கும் ஆனந்தமாய்த் தலையசைத்தேன்.
கைலாகு கொடுத்து குழந்தையைப் போல என்னை அள்ளிக் கொண்டான். கீழே வேட்டி காற்றில் ஆடியது. துவண்டு போன என் இரு கால்கள் நிற்கும் பலமிழந்து தொய்ந்திருந்தன. நிதானமாய் என்னைத் தூக்கிக் கொண்டு கீழிறங்கினான்.
அருகிலேயே காத்திருந்தது ஆட்டோ.
என்னை அவன் ஆட்டோவில் ஏற்றி அமர வைத்தபோது நடத்துனர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்த அதிர்ச்சி.
"வந்து.. நான்.." என்றார் கீழே இறங்கி என்னிடம் வந்து.
அவர் தோளைத் தட்டினேன் நட்பாக.
"எனக்கு வீட்டுலேயே அடைஞ்சு கிடக்க முடியல.. அதனால எப்பவாச்சும் ஒரு ரவுண்டு இப்படி.. உங்களுக்கு நன்றி .."
தம்பியும் ஆட்டோவில் ஏறிக் கொண்டான். வெளியே எட்டிப்பார்த்தேன்.
ஆட்டோ கிளம்பியபோது நடத்துனர் கையாட்டுவது தெரிந்தது. பதிலுக்கு நானும் புன்முறுவலுடன் கையாட்டினேன்.


(  நன்றி - கல்கி )


"

November 01, 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !




இனிய   தீபாவளி  நல்வாழ்த்துகள்   !