November 09, 2014

வெள்ளியங்கிரி - ஆன்மீகப் பயணம்



பர்வத மலை.. சதுரகிரி.. போய் வந்தாச்சு.
வெள்ளியங்கிரியை மட்டும் விட்டு வைப்பானேன் என்று நண்பரிடம் (2 முறை போய் வந்தவர்) கேட்டோம்.. நானும் இன்னொரு நண்பரும்.
இந்த பௌர்ணமிக்கு போகலாம் என்றார். 6.. 7 தேதிகளில் என்று திட்டமிட்டோம்.
குளுகோஸ் கரைத்த தண்ணீர்.. திராட்சை.. நெல்லி என்று முன்னேற்பாடுகள்.
நடந்து செல்ல வசதியாக கம்பு வாங்க கடைக்குப் போனால் ஏற இறங்கப் பார்த்தார்.
‘இப்பவா ஏறப் போறீங்க’
மதியம் 2 மணி அப்போது.
‘ஆமா.. நைட் மலைல தங்கிரலாம்னு.. காலைல சூரிய உதயம் பார்த்துத் திரும்பலாம்னு’
’இல்ல.. இன்னிக்கு கூட்டம் அதிகமில்லை.. மலை ஏறினவங்களும் காலைலயே போயிட்டாங்க.. இப்ப திரும்பிகிட்டு இருப்பாங்க’
வாசல் விநாயகர் கோவில் பூசாரியின் பார்வையிலும் ஒரு பதற்றம்.
விபூதி கொடுத்து எங்கள் பிடிவாதம் பார்த்து ‘முன்னேற்பாடாத்தானே வந்திருக்கீங்க.. நல்ல குளிர் இப்போ’ என்றார்.
மலை ஏற ஆரம்பிக்கும் இடம் அடைக்கப் பட்டிருந்தது.
.. பனிப்பொழிவு.. மிருகங்கள் நடமாட்டம்.. ஏற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது’..
எச்சரிக்கை மணி எங்களுக்குள் ஒலித்தது அப்போதுதான்.
அங்கே அடிவாரத்தில் கோவிலில் அன்னதானம் செய்கிறார்கள் தினமும். சாப்பிட்ட இலைகள் மலை போல் குவிந்து கிடந்தன முதலில் நாங்கள் பார்த்தபோது.
மறுநாள் பார்த்தபோது அவ்வளவாக இல்லை.
சரி.. ஆடு.. மாடு தின்றிருக்கும் என்று நினைத்தோம்.
‘நேத்து ராத்திரி காட்டுப்பன்னி கூட்டம் வந்துச்சு.. அதான்’
என்றார் ஒருவர் சாதாரணமாய்.
‘காட்டுப்பன்னியா..’
‘முந்தாநேத்து ஒரு சிறுத்தையே வந்திச்சே.. நாங்கலாம் விரட்டினோம். ஒரு நாயைக் கவ்விட்டு ஓடிருச்சு மலைக்கு மேல’
முதல் நாள் கேட்டார்கள். ‘குளிருமே.. என்ன வச்சிருக்கீங்க’
‘அதெல்லாம் வச்சிருக்கோம்’
‘2 மாசம் முன்னால 6 பேர் போனாங்க.. குளிர் தாங்காம ஒருத்தர் விறைச்சு.. போயிட்டாரு’
நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்..
மலை ஏறிக் கொண்டிருந்த போது 4 பேர் கீழிறங்கினார்கள்.
‘இப்பவா போறீங்க’
‘ஆமா’
‘பார்த்துப் போங்க.. ஒத்தை ஆனை கொப்பை ஒடிச்சுகிட்டு உலாத்துது.. நாங்களே வேற வழியா ஒரு கிமீ சுத்தி பாதையைப் புடிச்சு வந்தோம்’
’போன வருஷம் ஒத்தையா ஒரு ஆளு.. செந்நாய்ட்ட மாட்டி போயிட்டாரு’
இதை எல்லாம் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. கேட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்.
பெண்கள்,. குழந்தைகள் ஏறிப் போய் வருகிறார்கள்.
பல வருடங்களாய்ப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.
எல்லோரும் சொல்கிற ஒரே வார்த்தை..
‘அவனை நம்பி போங்க.. கை விட மாட்டான்’
தென்னாடுடைய சிவனே போற்றி !

( தொடரும் )

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒருவித திகிலுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் ஆரம்பமே ஜோர் ஜோர்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கோ !

கரந்தை ஜெயக்குமார் said...

நம்பினோர் கைவிடப்படுவதில்லை

கார்த்திக் சரவணன் said...

நான் சென்றபோது பத்து பதினைந்து காட்டெருமைகளைப் பார்த்தேன் சார்...

ADHI VENKAT said...

வெள்ளியங்கிரி வாசனை தரிசித்து தங்கள் பயணம் சிறப்பாக அமைந்து திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி சார்.

நான் சிறுவயதாக இருந்த போது என் அப்பா போய்விட்டு வந்திருக்கிறார். ஏழு மலை, நல்ல குளிர், கம்பு இல்லாமல் போக முடியாது என்றெல்லாம் சொல்லி கேட்டிருக்கிறேன்.

நாங்கள் 2009ல் அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகாவுக்கு சென்று தியானலிங்கத்தை தரிசித்து வந்திருக்கிறோம்.

தொடருங்கள். தொடர்கிறோம்.

vimalanperali said...

இவ்வளவுவையும் தாண்டி பயணிப்பது ஒரு வித தவமே,அல்லது பிடிவாதம் எனலாம்/

சுப்ரா said...

70 களில் கோவையில் படிக்கும்போது போய்வந்த நினைவுகளை மலரச் செய்கிறது . - சுப்ரா

ராமலக்ஷ்மி said...

அடுத்த பாகமும் வாசித்து விட்டேன். தொடருகிறேன்.

கே. பி. ஜனா... said...

ஆன்மிகத் தொடர் அற்புதமா ஆரம்பிக்குது...

கே. பி. ஜனா... said...

ஆன்மிகத் தொடர் அற்புதமா ஆரம்பிக்குது...

தி.தமிழ் இளங்கோ said...

சிறுகதை எழுத்தாளர் அல்லவா? அதுதான், வெள்ளியங்கிரி பயணத்தை ஒரு சஸ்பென்ஸ் வைத்தே தொடங்கி இருக்கிறீர்கள். நானும் உங்களோடு வருகின்றேன்.

Yarlpavanan said...

சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்

கோமதி அரசு said...

அவனை நம்பி போகும் போது எப்படி கைவிடுவான்!