October 08, 2015

இரு கவிதைகள்



1. கதவுகள் அடைக்கப்பட்டு
வெறிச்சோடிக் கிடக்கும் தெரு
என்னென்னவோ எண்ணங்களைத்
தூண்டி விடுகிறது
வாகனத்தில் விரையாது
நடந்து கடக்கும் பொழுதொன்றில்
யாரேனும் சிறு பிள்ளை
என் மேல் பந்தடிக்கலாம்
ஏன் இவ்வளவு தாமதமாய் என்று
எண்பத்தைந்து என்னை முறைக்கலாம்
கவனியாதது போல அவள்
கண்ணடிக்கலாம்
மதியமோ மாலையோ
கடந்து போன ஊர்வலப் பூக்கள்
மண்ணோடு மக்கிச்
சிதைந்து கிடக்கும் அந்தத் தெருவைக்
கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல
யாரை இனி நாளை முதல்
நான் பார்க்கப் போவதில்லை
இந்தத் தெருவில் ?
==========================================
2. மெலிதான பாடல்
காற்றில் ஒலிக்கிறது
இசையின் விரல்கள்
மனதை வருடுகின்றன
வரிகள் புரிபடாத இரைச்சலினூடே
பாடகியின் குரல் மட்டும்
மிக நெருக்கமாய்
சட்டென்று எல்லாத் துயரமும்
கொஞ்ச நேரத்திற்குத்
தள்ளி நிற்பதாய்
உறுதியளித்து விலகுகின்றன.
இந்தப் பாடலைப் போல்
அடுத்த பாடல் இராதென்று
உள்மனதின் பதைபதைப்பு
அந்த நிமிட ஆஸ்வாசத்தை
அவசரமாய்க் கையிலேந்திக் கொண்டு
பாடல் ஒலிக்கும் பிரதேசம் விட்டு
அடி பெயர்க்கிறேன்..
பாடலும் பாடகியும் கையசைக்க
நிதானமான புன்முறுவலுடன்
என்னை நெருங்குகின்றன
சற்றுமுன் விலகி நின்ற
என் செல்லக் கவலைகள்.

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மதியமோ மாலையோ கடந்து போன ஊர்வலப் பூக்கள் .. மண்ணோடு மக்கிச் சிதைந்து கிடக்கும் அந்தத் தெருவைக் கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல//

சோகமான முடிவு. நாளைமுதல் பார்க்க இயலாது என்பது மேலும் சோகம்தான்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பாடலும் பாடகியும் கையசைக்க, நிதானமான புன்முறுவலுடன் என்னை நெருங்குகின்றன
சற்றுமுன் விலகி நின்ற என் செல்லக் கவலைகள். //

ஆஹா, இதிலும் சோகமான முடிவே. இருப்பினும் ஆக்கம் அருமை. பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

ஃபேஸ்புக்கிலேயே ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதைகள்.

முதல் கவிதை மனதைத் தொட்டது....

பாராட்டுகள்.

ஜீவி said...

//சட்டென்று எல்லாத் துயரமும்
கொஞ்ச நேரத்திற்குத்
தள்ளி நிற்பதாய்
உறுதியளித்து விலகுகின்றன.
இந்தப் பாடலைப் போல்
அடுத்த பாடல் இராதென்று
உள்மனதின் பதைபதைப்பு.. //

உணர்வே வரிகளாகியிருக்கிற உன்னதம்...

மோகன்ஜி said...

நீங்கள் எறிந்தது மலரேயாயினும் வலிக்கத் தான் செய்கிறது.

கே. பி. ஜனா... said...

மனதை நெகிழ்த்தும் இரு கவிதைகள்...

Thenammai Lakshmanan said...

முதல் கவிதை வலி

இரண்டாவது செல்லக் கவலை அழகு :)