November 16, 2015

அம்மு 8


இண்டர்காமில் பெயர் தெரியும் அழைப்பு வரும்போதே. அம்முவின் ஆபிஸ் பெயர் தெரியும் போது கொஞ்சம் எனக்கு கை நடுங்கும்.
“சொல்லுங்க”
இன்னமும் வாங்க போங்க தான். அதென்னவோ எனக்கு அத்தனை சுலபமாய் நீ.. வா.. போ.. சொல்ல வருவதில்லை. அப்பாவிடம் கற்றுக் கொண்டது. வயதில் எத்தனை சிறியவர்களானாலும் வாங்க தான்.
“முடிஞ்சப்ப சீட்டுக்கு வாங்க.. ஒரு டவுட்”
அம்முவை முதன் முதலில் பார்த்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வேலை நிமித்தம் அவள் இருக்கும் செக்‌ஷனுக்குப் போக வேண்டியிருந்தது. அவள் அங்குதான் இருக்கிறாள் என்றும் அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்றும் தெரியாமலே போனேன்.
“என்னோட ட்டீஏ கிளெய்ம்ல கட்  பண்ணி பாஸ் பண்ணியிருக்காங்க. யார்கிட்ட கேட்கணும்”
இத்தனைக்கும் வெறும் டிக்கட் சார்ஜஸ் மட்டும். அதற்கும் ட்ரெய்ன் டிக்கட் வைத்திருக்கிறேன். ஐநூறு ரூபாய் கட். சம்பள பில்லைப் பார்த்ததும் சுர்ரென்று வந்தது. ஃபோன் செய்தால் நேரா வாங்க என்று பதில்.
“ஏன் கட் பண்ணியிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா”
அம்மு தலை நிமிர்ந்து என்னைப் பார்த்த நொடி இந்த நிமிஷமும் பளிச்சென்று நினைவில்.
”உங்க க்ளெய்மை எடுத்துப் பார்க்கணும். “
யாரிடமோ சொன்னாள். சொல்லப்பட்டவர் ஃபோனில் பேசிக் கொண்டு இவளுக்குத் தலையசைத்தார். பத்து நிமிஷம் பேசி விட்டு அருகில் வந்தார்.
“என்ன சொன்னீங்க மேடம்”
“இவர் க்ளெய்ம்ல கட் பண்ணியிருக்கு. டீடெய்ல் வேணுமாம்”
“டிக்கட் வச்சிருக்க மாட்டார்”
“வச்சிருந்தேன்”
“எடுக்கணும் மேடம். ரிகார்ட்ஸ் ரூம் போகணும். உங்க ஸ்டாப் நம்பர் சொல்லுங்க. தேடி எடுத்து வைக்கிறேன்”
என் பொறுமை அதன் எல்லையைக் கடந்தது.
“ஒரு தடவை டூர் போயிட்டு வாங்க. அப்ப புரியும் “
“ஸார் அனாவசியமா பேச வேண்டாம்”
“பின்னே. போன் பண்ணா நேரா வாங்கன்னு பதில். வந்தா இப்ப முடியாது அப்புறம்னு.. என்ன ஸார் இது”
அம்மு எழுந்தாள் அந்த நிமிடம். கொஞ்சம் தடுமாறினாள். பிறகு சுதாரித்து வலது காலை ஊன்றி.. அப்புறம் இடது கால். உட்கார்ந்திருந்தவரை புலப்படாத விஷயம்.
“ரெகார்ட் ரூம் போயிட்டு வரேன்.. வெயிட் பண்ணுங்க”
“இல்ல.. பரவாயில்ல. நான் அப்புறம் வரேன்”
“வெயிட்”
இதுதான் அம்மு. அவளிடம் பழக ஆரம்பித்தபின் எப்போது எதிர்பாராத ஆச்சர்யங்களுக்குக் குறைவே இல்லை. மயிற்பீலி கேஸட் அவள்தான் எனக்கு அன்பளித்தாள். தாஸேட்டனின் குரலில் சொக்கி ஒரு கடிதம் எழுதிக் கையில் கொடுத்தேன். என் பழக்கம் அது. எல்லோரும் தூங்கும் நள்ளிரவில் எனக்கு விழிப்பு வரும். நன்றி சொல்ல.. மனம் பகிர.. அந்த நேரம் தான் எனக்கு வசதியாகிப் போனது. பேசுவதை விட எனக்கு எழுத்து ரொம்ப சுலபம். என் நட்புகளுக்குக் கடிதம் எழுதுவதில் சளைப்பதே இல்லை. அவர்களிடம் இருந்து வரும் கடிதங்களைத் தேதி வாரியாக.. நட்பு வாரியாக ஃபைல் செய்து வைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
அவளின் உலகம் தனி. அதன் நியாயத் தீர்வைகளும். பெரும்பான்மை யோசிக்கிற விஷயங்களில் சட்டென்று வித்தியாசப் படுவாள். அதற்கு ஒரு நியாயம் வைத்திருப்பாள். அந்த மாதிரி நேரங்களில் நான் மௌனம் அல்லது புன்னகை. அவளிடம் வாதம் செய்ய முடியாது.
மொழி படம் சேர்ந்து போனோம். நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்கன்னு கேட்டபோது வசந்தி என் கையைக் கிள்ளினாள். இன்னொரு அலுவலர். எனக்குப் புரியவில்லை முதலில்.
அம்மு சம்மதித்த பின் நானும் வசந்தியும் பேசினோம்.
”அதுல ஜோதிகா கேரக்டர்..”
“ஓ.. ப்ச்.. அதான் வரேன்னு சொல்லிட்டாளே”
“ம்ம்”
படம் முடிந்து வரும் போது எங்களுக்குள் ஒரு இனிய மௌனம். கடைசிக் காட்சியில் ஜோவின் பிங்க் கலர் ஸாரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அதைச் சொன்னதும் வசந்தி ‘அதே மாதிரி வாங்கணும்’ என்றாள். அம்முவின் முகம் திரும்பியிருந்தது.
வசந்தி மறுநாள் சொன்னாள். அம்முவுக்கும் படம் ரொம்பப் பிடித்திருந்ததாய்.
நாங்கள் பேசும்போது அம்முவின் பேச்சுக்கிடையில் குறுக்கிடுவதில்லை. முக்கியமாய் நான். வசந்தி சில சமயம் எதிர் வாதாடுவாள். எனக்கு அம்மு பேசி கேட்டாலே போதும். பேசப்படும் எந்தத் தீவிர நிகழ்வுக்கும் நான் போய் தீர்வு சொல்ல முடியப் போவதில்லை. சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை. இதற்கு எதற்கு வீண்வம்பு..
இந்த முடிவும் ஆரம்ப நாளில் அம்முவுடன் ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தால் வந்தது. எதையோ பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாய் எனக்குக் கருத்து சொல்லும் ஆசை எப்போதும் இருந்ததில்லை. ஆனால் என கருத்து என்னவென்று கேட்டால்.. கேட்டவர் எவ்வளவு பிரியத்திற்குரியவரானாலும்.. எவ்வளவு பெரியவராய் இருந்தாலும் பட்டென்று மனதில் பட்டதைச் சொல்லி விடுவேன். இதுதான் என்னிடமுள்ள மிகப் பெரிய குறை.
ஒரு ஆன்மீக மடத்தில் பெரிய குருஜி – என் மீது பிரியம் உள்ளவர் – வரச் சொல்லி இருந்ததால் போயிருந்தேன். அவர்கள் வெளியிடும் ஆன்மீக இதழின் சமீபத்திய மாற்றங்கள் பற்றி பேச்சு வந்தது. அதன் எடிட்டர் ஸ்வமிஜியும் உடனிருந்தார்.
“எப்படி இருக்கு இப்பல்லாம்”
“ம்ம்”
“உங்க கருத்தைச் சொல்லுங்க”
“ எனக்கு முன்பிருந்த அமைப்புதான் பிடிச்சிருக்கு. இப்போ ஏதோ கமர்சியல் மேகசின் படிக்கிற உணர்வு”
அவ்வளவுதான். எடிட்டர் எழுந்து போய் விட்டார். குருஜியிடம் மன்னிப்பு கேட்டேன். ‘விடு.. அவர் உன் கருத்தைக் கேட்டார். நீ உன் மனசுல பட்டதைச் சொன்னாய்’
இதே சங்கடம் அம்முவிடமும் நேர்ந்தது. ’நீ என்ன நினைக்கிறே’ என்று கேட்டதுமே சுதாரித்திருக்க வேண்டும். சரி.. இதிலென்ன தப்பு என்று என் மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன். அது அம்முவின் கருத்திற்கு எதிரானது. அவ்வளவுதான். அடுத்த நிமிடம் நாங்கள் எதிரில் இருப்பதை லட்சியம் செய்யாத மாதிரி ஏதோ ஒரு ஃபைலைத் திறந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். வசந்தி என்னைப் பார்க்க.. நான் அவளைப் பார்க்க.. ஙே என்று விழித்ததை மறக்கவே முடியாது.
ஒரு வாரம் பேசவேயில்லை.  மதியம் கூட சாப்பிடுவதுமில்லை. பிறகு எப்படியோ சமாதானம் ஆனது. இதுதான் அம்மு. இப்போது என் சங்கடம் இதை வாசிக்கும் உங்களுக்குப் புரிந்திருக்கும். அவளிடம் போய் எப்படி என் காதலை.. அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவிருக்கும் என் விருப்பத்தைச் சொல்வது.. ஏதாவது முரண்டு பிடித்து விட்டால்..
வசந்தி தீர்மானமாய்ச் சொல்லி விட்டாள். அம்முவை சம்மதிக்க வைப்பது.. முழுக்க முழுக்க என்பாடு என்று. ’என்னை விட்டுருங்க.. அவ என் கூடவே ஒரு மாசமா பேசாம இருந்தா.. ஒரு பிரச்னையில.. அவ சம்மதம் மட்டும் கேட்டுருங்க. அப்புறம் நடக்க வேண்டியது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.’
அது ஒரு மழை நாள். பிய்த்து உதறியது. ஒரு மீட்டிங் முடிந்து வெளியே வந்தபோது அலுவலக நேரம் முடிந்து விட்டது. மணி ஏழு. வெளியே இருட்டு. பெரும்பான்மை அலுவலர்கள் போயாச்சு. வசந்திக்கு இதில் தொடர்பில்லை என்பதால் அவள் போய் விட்டாள். நான் என் கணினியை ஷட் டவுன் செய்து விட்டு வந்தபோது அம்முவின் அறையில் விளக்கெரிந்தது.
எட்டிப் பார்த்தேன். அம்மு.
“என்ன.. போகலியா”
“பில் நிறைய இருக்கு.. மாதக் கடைசி”
“மழை”
“ம்ம்”
எதிரில் உட்கார்ந்தேன். “நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாமா”
“வேண்டாம்”
ராதை தன் பிரேமத்துடனானோ கிருஷ்ணா யான் பாடும் கீதத்தோடனானோ.. பரையும் நினக்கேத்தன் இஷ்டம்.. என் ரிங்டோன் ஒலித்தது.
அம்மு என்னைப் பார்த்தாள். எழுந்து வெளியே போய்ப் பேசி விட்டு வந்தேன்.
“கார் கேட்டிருந்தேன் ட்ராவல்ஸ்ல.. எப்ப வரட்டும்னு கேட்டார். சொல்றேன்னு சொல்லியிருக்கேன்”
“….”
“உங்களை வீட்டுல விட்டுட்டு போகலாம்னு.. போகிற வழிதானே”
“வேணாம்.. நீங்க கிளம்பிப் போங்க. ஏன் என்னால லேட் ஆகணும்”
“பரவாயில்ல. எனக்கு ஒண்ணும் வேலை இல்லை.. போய் ஒரு உப்புமா கிண்டினாப் போதும்.. “
அரை மணி கழித்துத்தான் கிளம்பினாள். நான் வால்காவிலிருந்து கங்கை வரை படித்துக் கொண்டிருந்தேன். காரில் முன் சீட்டில் டிரைவருடன் நான். பின்னிருக்கையில் அம்மு. இறங்கும் போது ‘தேங்க்ஸ்’ என்றாள்.
தெருவிளக்கு சற்று தொலைவில். அம்முவின் மேல் லேசான வெளிச்சம். காத்திருந்த நேரத்தில் நான் எழுதியிருந்த கடிதத்தை நீட்டினேன்.
“பொறுமையாப் படிங்க. நாளைக்கு பதில் கேட்டுக்கிறேன். குட் நைட்”
கார் கிளம்பி விட்டது. மறுநாள் அம்மு சொல்கிற குட் மார்னிங் கிடைக்கவில்லை. வசந்தி ஏனோ லீவு. நான் தற்செயலாய்ப் போவதைப் போல் அம்முவின் அறைக்குப் போனால் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. ஃபோன் செய்தால் எடுக்கவே இல்லை.  அடுத்த நாள் வசந்தி வந்தாள். வழக்கம் போல சாப்பாட்டிற்கு என்னை அழைக்கவில்லை. வசந்தியும் ஃபோனில் தான் சொன்னாள்.
‘உங்க லட்டரைக் கிழிச்சுட்டாளாம். நீங்க இனிமேல் அவளை இது பற்றி கேட்கக் கூடாதாம். “
“அதான் ஏன்..”
“விட்டுருங்க”
எனக்கு இப்போது 45 வயதாகிறது. அம்முவுக்கு 42. அதே ஆபிஸ்தான். ஒரு மாத இடைவெளிக்குப் பின் அலுவலக நிமித்தமாய்ப் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். இருவருமே இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
“நீ ஏண்டா பண்ணிக்கல”
மெல்லிய சிரிப்புடன் என் பதில் இப்போதும்
“தோணல”


3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எல்லோரும் தூங்கும் நள்ளிரவில் எனக்கு விழிப்பு வரும். நன்றி சொல்ல.. மனம் பகிர.. அந்த நேரம் தான் எனக்கு வசதியாகிப் போனது. பேசுவதை விட எனக்கு எழுத்து ரொம்ப சுலபம். என் நட்புகளுக்குக் கடிதம் எழுதுவதில் சளைப்பதே இல்லை. அவர்களிடம் இருந்து வரும் கடிதங்களைத் தேதி வாரியாக.. நட்பு வாரியாக ஃபைல் செய்து வைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.//

இதைப்படிக்க எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

//“நீ ஏண்டா பண்ணிக்கல” மெல்லிய சிரிப்புடன் என் பதில் இப்போதும் “தோணல” //

நல்ல கதை. கடைசியில் வழக்கம்போல நல்லதொரு டிவிஸ்ட்.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல கதையை வாசிக்கையில் சில தொந்தரவுகள்! ரசித்துபடிக்க முடியவில்லை! மீண்டும் படித்து பகிர்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட கதை.....

தொடரட்டும்... நானும் தொடர்கிறேன்.